சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் மகனும், மூத்த நடிகருமான பிரபு ஏராளமான தமிழ் திரைப்படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். நடிகர் பிரபுவுக்கு விக்ரம் பிரபு என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, தமிழ் சினிமாவில் கும்கி, டாணாக்காரன் என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'இறுகப்பற்று' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், பிரபு மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகிய இருவருக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. ஆதிக் ரவிச்சந்திரன், ஜிவி பிரகாஷ் குமார் நடித்த 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து சிம்பு நடித்த 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' பிரபு தேவா நடித்த 'பகீரா' ஆகிய படங்களை இயக்கினார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.