சென்னை:இந்த Area அந்த Area, அந்த இடம் இந்த இடம் எங்கேயும் எனக்குப் பயம் கெடையாதுடா All Area-லையும் ஐயா கில்லிடா-என்ற டைலாக் என்னவோ நடிகர் விஜய் சொன்னதுதான். ஆனால் இந்த டைலாக்கை வைத்து Kollywood Bollywood, Tollywood, Hollywood-னு எல்லா இடமும் நமது இடம்தான் என்று நடிகர் தனுஷ் தனது ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். ராஞ்சனா படம் மூலம் நடிகர் தனுஷ் ஹிந்தி திரையுலகில் அறிமுகமாகி 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அதே கூட்டணியில் மீண்டும் ஹிந்தி திரையுலகில் கலக்கப்போகிறார் நடிகர் தனுஷ்.
இது தொடர்பான அறிவிப்பைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ராஞ்சனா படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது, சில படங்கள்தான் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும். அந்த வகையில் எனக்கு இந்த படம் என குறிப்பிட்டுள்ளார். மேலும், ராஞ்சனாவை கிளாசிக் ஆக்கிய உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் எனவும் ரஞ்சனாவை தொடர்ந்து மீண்டும் அங்கிருந்து ஒரு கதைதான் தேரே இஷ்க் மெய்ன் எனவும் கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி, இந்த திரைப்படத்தை பொருத்தவரை எந்த மாதிரியான ஒரு பயணம் எனக்காக காத்திருக்கிறது என்று தெரிவில்லை எனவும், சாகச நிகழ்வுக்காக உங்களோடு நானும் காத்திருக்கிறேன் எனக்கூறி நன்றியுடன் ஹர் ஹர் மகாதேவ் என்று குறிப்பிட்டுள்ளார்".
கடந்த 2013ம் ஆண்டு பாலிவுட் முன்னணி இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ராஞ்சனா திரைப்படம் வெளியாக வெற்றி பெற்றது மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் களைகட்டியது. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக, சோனம் கபூர் நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் அபேய் தியோல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த நிலையில், வைரமுத்து பாடல் வரிகளை எழுதி இருந்தார்.
ஜான் மகேந்திரன் வசனமும் எழுதியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இதே கூட்டணி மீண்டும் "தேரே இஷ்க் மெய்ன்" என்ற ஹிந்தி படம் மூலம் திரையுலகிற்கு புதிய படைப்பை உருவாக்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியான நிலையில் நடிகர் தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இந்த படம் தொடர்பான கூடுதல் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடிகர் தனுஷ் கடந்த 2014ஆம் ஆண்டு "ஷமிதாப்" மற்றும் 2021ஆம் ஆண்டு 'அந்தராங்கி ரே' என்ற ஹிந்தி படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முதன் முதலில் தனுஷ் அறிமுகமானபோது திரையுலகமும் சரி சினிமா ரசிகர்களும் அவரை ஒரு ஹீரோவாக அல்ல நடிகராகக்கூட ஏற்றுக்கொள்ளப் பலரும் தயக்கம் காண்பித்த நிலையில் அவர் தற்போது பல மொழிகளில் களைகட்டும் பான் இந்தியா அல்ல பான் இன்டர்னேஷ்னல் ஹீரோவாக உருவாகி இருப்பது அவரின் திறமைக்கும், உழைப்புக்கும் கிடைத்த வெற்றி என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க:Vijay: வா தலைவா வா.. சட்டமன்றத்தின் ஆளுமையே.. ஊரெல்லாம் விஜய் ரசிகர்கள் போஸ்டர்!