லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.சுபாஸ்கரன் தயாரிப்பில் இயக்குநர் பி. சற்குணம் இயக்கத்தில் ராஜ்கிரண், அதர்வா முரளி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ''பட்டத்து அரசன் ''. இந்தப் படத்தில் நடிகை ராதிகா, நடிகர்கள் ஜெயபிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லோகநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
களவாணி, வாகை சூடவா, சண்டி வீரன் என ஹிட்டு படங்களை கொடுத்த சற்குணத்தின் அடுத்த படைப்பாக இந்த ''பட்டத்து அரசன்'' திரைப்படம் உருவாகியுள்ளது. சென்சார் செய்யப்பட்டு யு சான்றிதழ் பெற்றுள்ள இந்த திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் திரைப்படம் பற்றி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இயக்குநர் சற்குணம் கூறியதாவது:-
'தஞ்சை மாவட்டம், ஆம்லாப்பட்டு என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, அப்பா, பேரன், மாமன், மச்சான் என ஒரு குடும்பமே கபடி விளையாடுவது பற்றி கேள்விப்பட்டேன். அது என்னைப் பாதித்தது. உடனே நேரடியாக சென்று அவர்களிடம் பேசி அதற்கான காரணத்தை தெரிந்து கொண்டேன். இருப்பினும் அவர்கள் சொன்ன விஷயம் ஒரு படம் எடுப்பதற்கு போதுமானதாக இருக்காது என்பதால் அதனுடன் என்னுடைய கற்பனை கதையை சேர்த்து திரைக்கதையை உருவாக்கினேன்.
அதேபோல் தஞ்சைப் பகுதியில் பிரபல கபடி வீரராக விளங்கியவர் பொத்தாரி. அவரைப் பற்றி அந்தப் பகுதியில் தெரியாதவர்களே இருக்கமுடியாது. அந்தப்பெயரை இந்த பட்டத்து அரசன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான ராஜ்கிரண் கதாபாத்திரத்திற்கு வைத்துள்ளேன். இதுகுறித்து ராஜ்கிரணிடம் கூறிய போது அவர் மகிழ்ச்சி அடைந்தார்.
அதேபோல் மற்ற வீரர்களின் பெயர்களும் தமிழ்நாட்டில் கபடி விளையாட்டில் சிறந்து விளங்கியவர்களின் பெயரை வைக்குமாறு கூறினார். நானும் அப்படி வைத்தால் அது அவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக அமையும் என நினைத்து எல்லா கதாபாத்திரங்களுக்கும் பிரபல கபடி விளையாட்டு வீரர்களின் பெயரையே சூட்டியுள்ளேன்.
இதன் கதைக்களம் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் நடப்பது போன்று அமைத்துள்ளேன். அங்கு வெற்றிலை தோட்டம் வைத்துள்ள குடும்பம் தான் ராஜ்கிரணின் குடும்பம். தார பங்கு என்ற விளக்கத்தின் அடிப்படையில் ராஜ்கிரணின் இரண்டு தாரங்களுக்கும் தனது சொத்தை சமமாக பிரித்துள்ளார். இதனால் முதல் தாரத்தின் மகனுக்கும் இரண்டாம் தாரத்தின் மகனுக்கும் விரோதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஊர் பிரச்னை ஏற்பட்டு ஒரு குடும்பம் ஊரை எதிர்த்து கபடி விளையாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. இதுதான் அந்த படத்தின் மைய கரு. இதில் கபடி விளையாட்டு என்பது குடும்ப சண்டைகளுக்கிடையே ஒரு பகுதியாக வைக்கப்பட்டுள்ளது.
முழுவதுமே கபடி விளையாட்டாக இருக்காது. இதில் காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்தும் சேர்ந்து ஒரு கமர்சியல் பேக்காக வந்துள்ளது. ராஜ்கிரண், அதர்வா கதாபாத்திரங்கள் சிறப்பாக உள்ளன. அவர்கள் இருவரும் மோதிக் கொள்ளும் காட்சிகள் படத்தின் திருப்புமுனையாக அமையும்.