சென்னை: வேதிகா 2005இல் வெளியான மதராஸி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து முனி, சக்கரக்கட்டி, காளை, பரதேசி, காவியத் தலைவன், காஞ்சனா 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இந்நிலையில் நடிகை வேதிகா விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு தனது சமூக வலைதள பக்கங்கள் மூலம் குரல் கொடுத்து வருகிறார். சில நாட்களுக்கு முன் பன்றிகள் இறைச்சிகாக சிதைக்கப்படுவதாக பன்றி பண்ணையிலிருந்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் "உலகம் முழுவதும் மனிதன் உண்பதற்காக கோழிகள், மாடுகள், ஆடுகள், பன்றிகள் உள்ளிட்ட பல விலங்குகள் சிதைக்கப்படுகின்றன. மனித உணவுக்காக விலங்குகள் கொடுமைக்கு உள்ளாகின்றன. வன்முறையில்லாத சைவத்தை தேர்வு செய்யுங்கள்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் நடிகை வேதிகா சமீப காலத்தில் வீகன் (vegan) உணவு முறைக்கு மாறியுள்ளார். வீகன் உணவு முறைக்கு ஆதரவு அளித்து இறைச்சி கடையில் வெட்டுவதற்காக கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த கோழிகளை மீட்டுள்ளார். இது குறித்து அவரது பதிவில் “மனிதன் கண்டுபிடித்த மிகவும் மோசமான ஆயுதம் கூண்டு. நான் இறைச்சி கடையில் கோழிகளை பார்க்கும் போது வேதனையாக இருக்கும். அவற்றை பாதுகாக்க வேண்டும். அதுவும் பிராய்லர் கோழிகள் இறைச்சி விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்டவை.
பிராய்லர் கோழி ஆயுட்காலம் 45 நாட்கள் மட்டுமே. நான் தற்போது இறைச்சி கடையில் 4 நாட்டு கோழிகளையும், 2 வாத்துகளையும் காப்பாற்றியுள்ளேன். இதனை மணிகண்டன் என்பவர் வளர்க்கவுள்ளார். நீங்கள் விலங்குகள் சார்ந்த உணவுகளை தவிர்ப்பதன் மூலம் நீங்கள் ஒரு சூப்பர் ஹீரோவாக மாறலாம். #govegan" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:லியோ சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி!