சென்னை: இயக்குநர் சுதீப்டோ சென் இயக்கத்தில் தமிழ், மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் கடந்த 5-ஆம் தேதி வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி'. இந்த படத்தில் வேறு மதத்து பெண்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றி, அவர்களை தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் பணிபுரிவதாகவும், இதுவரை கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் கட்டாய மதமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பில் இருப்பதாகவும் காட்சிகள் இருந்தது.
இதனால், இதற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பட பிரபலங்கள் உள்பட பல்வேறு இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. முக்கியமாக, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தைத் தூண்டும் விதமாக உள்ளது என்றும், சங்பரிவாரின் கொள்கையை பிரச்சாரம் செய்வதற்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும், கேரளாவில் அரசியலில் ஆதாயம் அடைவதற்காகவே சங்பரிவார் அமைப்புகள் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
அதேநேரம், கேரள மாநில காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான வி.டி.சதீஷன், மத்திய அரசு தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய வேண்டும் என கூறினார். அதேபோல், கேரளாவைச் சேர்ந்த முஸ்லீம் இளைஞர் லீக் அமைப்பு, படத்தில் கூறுவதுபோல், நாடு கடத்தப்பட்ட கூறப்படும் பெண்களின் அடையாளத்தைக் காட்டினால் 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்தார்.
மேலும், திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கேரளாவில் உள்ள ஒரு மசூதியில் இந்து மத தம்பதிக்கு இந்து சமய முறைப்படி நடைபெற்ற திருமணம் தொடர்பான வீடியோவை மேற்கோள்காட்டி, மனிதநேயம் எனவும் தனது ட்விட்டில் குறிப்பிட்டிருந்தார்.அதேநேரம், படம் திரையிடப்பட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். இதனால் இப்படத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இதனிடையே, இப்படத்தில் நடித்துள்ள நடிகை சித்தி இத்னானி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தி கேரளா ஸ்டோரி படம் வெறுப்பை உருவாக்க அல்ல. விழிப்புணர்வு உண்டாக்க. எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. தீவிரவாதத்திற்கு எதிரானது. ஒரு நடிகையாக நான் நியாயம் செய்துள்ளதாக நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து பிரதமர் மோடி, "தீவிரவாதத்தை தோலுரித்துக் காட்டுவதாக தி கேரளா ஸ்டோரி திரைப்படம் அமைந்துள்ளது" என பேசியது மேலும் சர்ச்சைக்கு வித்திட்டது.
இவ்வாறு பல்வேறு தடைகளை தாண்டி கடந்த மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படத்திற்கு வரி விலக்கு அளித்து மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்து உள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் படம் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. அதேநேரம், மேற்குவங்கத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'தீவிரவாதத்தை தோலுரித்துக் காட்டும் 'The Kerala Story': பிரதமர் மோடி பேச்சு!