சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் நயன்தாரா நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் ’அன்னபூரணி’. இப்படத்தை, நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தில் நடிகை நயன்தாரா உடன் நடிகர் ஜெய், கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நயந்தாராவின் 75வது படமாக வெளியான இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த காட்சிகள் சர்ச்சையை கிளப்பின.
முன்னதாக இப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் அண்மையில் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் இப்படம் வெளியானதை அடுத்து, படத்தில் இடம் பெற்றிருந்த சில காட்சிகள் சர்ச்சையை கிளப்பின. குறிப்பாக, சில காட்சிகள் மத உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
அதனைத் தொடர்ந்து, இப்படத்தில் இடம் பெற்றுள்ள சர்சைக்குறிய காட்சிகள் நீக்கும் வரையில் ஓடிடி தளத்தில் இருந்து நீக்குவதாக, அப்படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டீயோஸ் அறிவித்திருந்தது. இதற்கு, திரைத்துறையினர் பலர் தங்களது கண்டனங்களை சமூக வலைத்தளம் மூலமாக தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நடிகை நயந்தாரா மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என்று குறிப்பிட்டு, அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "எனது நடிப்பில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும், சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
'அன்னபூரணி' திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல், ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே 'அன்னபூரணி' திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம்.