சென்னை: இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'கும்கி' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பரிச்சயமானார் லட்சுமி மேனன். அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தார். கடைசியாக அஜித் நடித்த 'வேதாளம்' படத்தில் அவருக்குத் தங்கையாக நடித்தார்.
அதன் பிறகு சமீப காலமாக திரைப்படங்களில் அவரை பார்க்க முடியாமல் இருந்தது. இந்நிலையில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடிக்கும் "சப்தம்" படத்தின் நாயகியாக நடிகை லட்சுமி மேனன் இணைந்துள்ளார். அறிவழகன் - ஆதி கூட்டணியில் வெளியான ஈரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ஹாரர் படமாக உருவான அப்படம் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது.
இந்த நிலையில் மீட்டும் அவர்களின் வெற்றிக்கூட்டணி இணைந்துள்ளது. Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்கும் சப்தம் படத்தில் ஆதி மற்றும் லட்சுமி மேனன் நடிக்கின்றனர். இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தற்போது நிறைவடைந்துள்ளது. விரைவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆதி, லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.
நடிகை லட்சுமி மேனன் இப்படத்தில் இணைந்தது குறித்த அறிவிப்பை ஒரு போஸ்டர் தயாரிப்பு குழுவினர் பகிர்ந்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது. திரில்லர் படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குநர் அறிவழகன். இப்படத்தில் தயாரிப்பாளராகத் தனது புதிய பயணத்தைத் துவங்கியுள்ளார். ஈரம் படத்தில் இந்த வெற்றிக்கூட்டணிக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மெட்ரோ ரயில் பணியில் விபத்து: போலி சான்றிதழ் வழங்கிய கிரேன் ஆப்ரேட்டரை பணியில் சேர்த்த 2 என்ஜினியர்கள் கைது!