கோலிவுட் சினிமாவின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. மாப்பிள்ளை படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி எங்கேயும் காதல், வேலாயுதம் என பல வெற்றி திரைப்படங்களில் நடத்து பெயர் பெற்றவர். இந்த நிலையில் ஹன்சிகா மோத்வானி தனது குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை கடந்த ஆண்டு டிச.4ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மண்டோடா கோட்டை அரண்மனையில் கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் திரைத்துறையினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துக்கொண்டனர். ஹன்சிகாவின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மட்டுமே இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், வீடியோக்கள் குறித்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், திருமண நிகழ்வை டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் 'லவ் ஷாதி டிராமா' (Love Shaadi Drama) என்ற நிகழ்வாக ஒளிபரப்ப உள்ளது. பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பாகவுள்ள இந்நிகழ்வின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஹாட்ஸ்டார் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருமணத்தை அறிவித்த கணம் முதல், திருமண திட்டமிடல்கள், திருமண வடிவமைப்பாளர்கள் மற்றும் குடும்பத்தினர் திருமணத்தை நடத்த செய்த போராட்டங்கள் என அனைத்தையும் இந்த நிகழ்ச்சி காண்பிக்கும் என கூறியுள்ளது.