சென்னை: வெண்ணிலா கபடி குழு, முண்டாசுப்பட்டி, ராட்சசன், ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்கள் மூலம் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் கடைசியாக 'கட்டா குஸ்தி' படம் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதனை அடுத்து தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கிற சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அண்மையில் 'லால் சலாம்' படத்தின் டீஸ்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த ஒரு புகைப்படத்தால் நெட்டிசன்களின் வசைவுக்கு ஆளாகியுள்ளார். அதில் கடந்த 14ஆம் தேதி கமல்ஹாசன் மற்றும் அமீர் கான் உடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, எல்லோருக்கும் பிடித்தமானவர்களுடன் எடுத்துக் கொண்ட, பிடித்த புகைப்படம் என்று குறிப்பிட்ட பகிர்ந்திருந்தார்.
இதையும் படிங்க:"ஐஏஎஸ் படிக்கிறீங்களா.. நான் படிக்க வைக்கிறேன்" மறைந்த விவசாயியின் மகளுக்கு உறுதியளித்த விஷால்!
மேலும் அதில், "Superstars are superstars for a reason" என்று பதிவிட்டிருந்தார். பின்னர் அதனை எடிட் செய்து விட்டு, "Stars are stars for the reason" என்று மாற்றினார். இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதலில் சூப்பர் ஸ்டார்ஸ் (Superstars) என்று போட்டுவிட்டு பின்னர் ஏன் மாற்ற வேண்டும் என்று நடிகர் விஷ்ணு விஷாலை நெட்டிசன்கள் விமர்சித்து கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், இதற்கு விளக்கமளிக்கும் விதமாக நடிகர் விஷ்ணு விஷால் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சூப்பர்ஸ்டார்கள் அனைவரும் சூப்பர்ஸ்டார்கள் தான். நான் அந்த பதிவை எடிட் செய்ததால், நான் பலவீனமானவன் அல்ல. சூப்பர் ஸ்டாராக இருக்கும் அனைவரையும் நான் நேசிக்கிறேன்.
எனவே எனது சமூக வலைத்தளப் பக்கத்தில், எதிர்மறையான கருத்துக்களைப் பரப்புவோர் கிளம்புங்கள். நமக்கு என்று ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் பட்டம் மட்டுமே உள்ளது. ஆனால் என்னுடைய மதிப்புக்கு அப்பாற்பட்டு சாதித்த அனைவருமே என்னை பொருத்தவரை சூப்பர் ஸ்டார்கள் தான்" என்று பதிவிட்டு பகிர்ந்துள்ளார். இதற்கும் நெட்டிசன்கள் பல விதமான கமெண்டுகளும், மீம்ஸ்களும் பதிவிட்டு, விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:நடிகர் நானா படேகர் வைரல் வீடியோ விவகாரம் - விளக்கமளித்து மன்னிப்பு!