சென்னை: விஷால் நடிப்பில் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் சமீபத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் விஷால் திரை வாழ்விலேயே மிகப் பெரிய வெற்றியை பெற்றது எனலாம். தற்போது வரை கிட்டத்தட்ட ரூ.80 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனையடுத்து மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் டப் செய்து கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஷால் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், "மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிட மும்பை சென்சார் போர்டு லஞ்சம் கேட்டதாக தெரிவித்திருந்தார். மேலும் படத்தை வெளியிட ரூ.3.5 லட்சமும், சென்சார் செய்ய ரூ.3 லட்சமும் கொடுத்துள்ளதாகவும்" அவர் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு நடிகர் விஷால் அந்த வீடியோ மூலமா கோரிக்கை விடுத்து இருந்தார். விஷாலின் இந்த புகாருக்கு பதிலளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை, இந்த விவகாரத்தில் யாரேனும் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதுகுறித்து விசாரிக்க அமைச்சக அதிகாரி மும்பை விரைந்து உள்ளதாகவும் தெரிவித்தது.
இதனையடுத்து மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நடிகர் விஷால் நன்றி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டு உள்ளதாவது, "மும்பை சென்சார் போர்டின் ஊழல் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைக்கு நன்றி. ஊழலில் ஈடுபடும் அல்லது ஊழலில் ஒரு பகுதியாக இருக்கும் ஒவ்வொரு அரசு அதிகாரிகளுக்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்.
ஊழல் செய்யாமல் நேர்மையான பாதையில் செல்ல இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற திருப்தியை என்னை போன்ற சாமானியர்களுக்கும், மற்றவர்களுக்கு இது தருகிறது ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டு உள்ளார். விஷாலின் இந்த துணிச்சலான செயலை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே விஷால் திருட்டு விசிடி பிரச்சினையில், நேரடியாக கடைகளுக்கே சென்று சோதனை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை காவல் துறையிடம் பிடித்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ஹிட்லர்’ மோஷன் போஸ்டர் வெளியீடு!