சென்னை:சென்னை சைதாப்பேட்டை அருகே உள்ள அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாமின் 8-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷால், தனக்கு மிகவும் பிடித்த அரசியல்வாதி அப்துல்கலாம் எனக் கூறினார்.
மேலும் குடியரசுத் தலைவர் பதவிக்கே பெருமை சேர்த்த அவர், தன் வாழ்நாள் முழுவதும் மாணவர்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றம் குறித்து மட்டுமே சிந்தித்து செயல்பட்டவர் எனவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும் அவர் நடத்தி வரும் 'தேவி அறக்கட்டளை' குறித்து பேசிய விஷால், இதன் மூலம் மாணவர்களுக்காக பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும், ஏழை எளிய மாணவர்களின் கல்விச் செலவுக்காக அனைவரும் முடிந்த வரையில் உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகர் விஷாலிடம், செய்தியாளர்கள் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த விஷால், அரசியல் என்பது சமூக சேவை எனவும், அந்தப் பணியை ஆற்றத்தான் மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள் எனவும் கூறினார்.
மேலும் மற்ற அரசு ஊழியர்களைப் போல முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு மக்கள் சம்பளம் தரும் நிலையில், அவர்களுக்காகப் பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும் அரசியல் சேவை ஆற்றும் இடமே தவிர, பணம் சம்பாதிக்கும் இடம் அல்ல எனவும் விஷால் தெரிவித்தார்.