தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விஜய் மீது செருப்பு வீசிய விவகாரம்; நடிகர் விஷால் கூறுவது என்ன? - chennai news

Actor Vishal byte: கூட்டத்தில் என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியாது. இருந்தாலும் அவ்வளவு பெரிய நடிகர் வந்து அஞ்சலி செலுத்திய போது இப்படி செய்திருக்கக் கூடாது என்று விஜய் மீது செருப்பு வீசிய விவகாரம் குறித்து நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

Actor Vishal
நடிகர் விஷால்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 9:23 PM IST

Updated : Jan 9, 2024, 11:06 PM IST

சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் 28ஆம் தேதி காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏராளமான திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அங்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விஷால் வெளிநாட்டில் இருந்ததால் விஜயகாந்த் மறைவின் போது வரமுடியவில்லை. இதனைத் தொடர்ந்து இன்று (ஜன.09) நடிகர் ஆர்யாவுடன் விஜயகாந்த் நினைவிடம் வந்த விஷால் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு விஜயகாந்த் வீட்டிற்குச் சென்ற அவர், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதன் பின்னர், நடிகர் விஷால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "விஜயகாந்த் குடும்பத்தைப் பார்த்து ஆறுதல் தெரிவித்தேன். நடிகர் சங்க பொதுச் செயலாளராக வெற்றி பெற்று விஜயகாந்த்தின் வீட்டிற்கு வந்தபோது அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும் என் காதில் கேட்டுக் கொண்டிருக்கிறது.

இன்று நம்மிடம் இல்லை என்பது தர்ம சங்கடமான விஷயம். மேலும் ஒரு நல்ல மனிதராக பெயர் வாங்குவது சாதாரண விஷயம் அல்ல. லட்சக்கணக்கான பேர்களுக்கு அவர் உணவு வழங்கியுள்ளார். இதுமட்டும் அல்லாது தான் சாப்பிடக்கூடிய சாப்பாடு மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கக் கூடிய ஒரு நல்ல மனிதர்" என்று புகழ்ந்து பேசினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், "தான் மட்டுமின்றி அனைத்து கலைஞர்களும் சரிசமம் என நினைத்தவர். நல்ல நடிகராக அரசியல்வாதியாக, சமூக வாதியாக இருந்த அவருக்கு நான் ஒரு பெரிய ரசிகன். அவரது மறைவின் போது நான் இங்கு இல்லாமல் என்னுடைய கடமையைச் செய்யவில்லை என்ற குற்ற உணர்வு நான் சாகும் வரை உறுத்திக் கொண்டு இருக்கும். மேலும், நடிகர் சங்கம் சார்பில் 19ஆம் தேதி இரங்கல் கூட்டம் நடத்த உள்ளோம்" என்றார்.

இதனைத் தொடர்ந்து, விஜய் மீது செருப்பு வீசிய விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, "யார் விஜய் மீது செருப்பைத் தூக்கி அடித்தார்கள்? எதற்காக அடித்தார்கள்? என தெரியவில்லை. அவ்வளவு பெரிய கூட்டத்தில் என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியாது. இருந்தாலும் அவ்வளவு பெரிய நடிகர் வந்து அஞ்சலி செலுத்திய போது இப்படி செய்திருக்கக் கூடாது" என்று பதில் அளித்தார்.

இதையும் படிங்க:நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க பரிசீலனை - நடிகர் விஷால்

Last Updated : Jan 9, 2024, 11:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details