சென்னை: சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் வெளியாவதற்கு முன்பு எதிர்பார்ப்பு சற்று குறைவாக இருந்தாலும் காவாலா, ஹுகும் ஆகிய பாடல்கள் வெளியான பின்பு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் ரஜினிகாந்த் இசை வெளியீட்டு விழாவில் கூறிய காக்கா, கழுகு கதை சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் படம் வெளியான பின்பு ரஜினிகாந்த் அளவிற்கு சிவராஜ் குமார் வரும் காட்சிகளில் ரசிகர்கள் திரையரங்குகளில் ஆரவாரம் செய்தனர். ரஜினி அளவிற்கு சிவராஜ் குமாருக்கு screen presence உள்ளது எனவும், அவர் அதிக தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என தமிழ் சினிமா ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இப்படம் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாராப்பூர்வமாக அறிவித்தது.
ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்துக்கு பரிசுத்தொகையும், பிஎம்டபிள்யு காரும் பரிசளித்தார். இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு பரிசுத் தொகையுடன் porsche காரை பரிசளித்தார். இந்நிலையில் ஜெயிலர் படத்தில் வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடித்திருந்தார். விநாயகன் முன்னதாக திமிரு, மரியான் ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்தார்.