சென்னை:ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட கஷ்டங்களை முக்கிய கருவாக கொண்டு தங்கலான் திரைப்படம் தயாராகி வருகிறது.
மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்தியா படமாகவும் வெளியாகிறது. இந்த நிலையில் தங்கலான் படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர் விக்ரம், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், தனஞ்செயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடிகர் விக்ரம் பேசும் போது, "எல்லோரையும் பற்றி நிறைய பேச ஆசைப்படுகிறேன். அதனை அடுத்தடுத்த நிகழ்வுகளில் பேசுகிறேன். இப்படத்தின் முயற்சி என்ன என்றால்?. அமெரிக்க வரலாறு, சீனா வரலாறு எல்லாம் இருக்கிறது. வரலாற்றில் அடிமைத்தனத்தை மறைக்க முயல்கிறார்கள்.
அது நமது இந்தியாவில் நிறைய நடந்துள்ளது, அதில் நல்லதும் உள்ளது கெட்டதும் உள்ளது. ஆங்கிலேயர் மட்டும்தான் நமக்கு தெரிகிறது. இப்படத்தில் சோகம் மட்டும் இல்லை. டைட்டானிக் படத்தில் காதல்தான் பிரதானம் என்றாலும் கப்பலின் மூலம் அதனை சொல்லியிருப்பார்கள் அதுபோலத்தான் தங்கலான். அந்த காலத்தில் இந்த சமுதாயம் எப்படி இருந்தது என்று இருக்கும்.