சென்னை:தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வரும் பா.ரஞ்சித், தற்போது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ‘தங்கலான்’ என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் முதன் முறையாக பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணி அமைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த திரைப்படத்தில் விக்ரம் உடன் மாளவிகா மோகனன் மற்றும் பசுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
தங்கலான் திரைப்படம், சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பது போன்ற கதை என்றும், கோலார் தங்கச் சுரங்கத்தில் பணியாற்றிய தமிழ் மக்களின் கதை என்றும் தகவல் வெளியாகி வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
உச்சிக்கு வந்தால் திட்டித் தீர்க்கும் தங்கலான்! டிரண்டாகும் சியான் விக்ரமின் பதிவு நீண்ட வருடங்களாக ஒரு மிகப் பெரிய வெற்றிக்கு காத்துக் கொண்டு இருக்கும் விக்ரமுக்கு தங்கலான் திரைப்படம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தான் முன் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் உற்சாகத்துடன் படப்பிடிப்பு தளத்தில் விக்ரம் காணப்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:"முதல்வர் பதவி ஸ்டாலினுக்கு கிடைத்த அங்கீகாரம்" நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
அதுமட்டுமின்றி சமீப காலமாக தனது ட்விட்டர் பக்கத்தில் எதாவது ஒரு தத்துவத்தை பதிவிட்டு வருபவர் அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். இப்படத்திற்காக மீண்டும் தனது உடலை வருத்தி கட்டுக்கோப்புடன் காணப்படுகிறார். இவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். அந்த பதிவுக்கு நெட்டிசன்களும் காமெடியாக பதில் அளித்து வருகின்றனர்.
ஒரு சூரியன் புகைப்படத்தை பகிர்ந்து உதிக்கும் போதும் மறையும் போதும் ரசிக்கும் உலகம்.. உச்சிக்கு வந்தால் திட்டித் தீர்க்கும். #தங்கலான் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு ஒரு ரசிகர் நாங்கள் கொண்டாடுவோம் ஏன் என்றால் நான் ஏசி மெக்கானிக் என்று பதிலளித்திருந்தார். இந்த பதிவு மிகவும் ரசிக்கப்பட்டது.
இதற்கு விக்ரமும் சிரிப்பது மாதிரி ஸ்மைலி பதிவிட்டுள்ளார். விக்ரம் இத்தனை உற்சாகமாக இருக்கிறார் என்றால் படம் நன்றாக வந்துகொண்டு இருப்பது போலவும் இப்படத்தின் மீது அவருக்கு மிகப் பெரிய நம்பிக்கை உள்ளது போலவும் தோன்றுகிறது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. முதல் பாகத்தில் விக்ரமின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. ஆனால் தனி ஹீரோவாக அவர் நடித்த படங்கள் எதுவும் சமீப காலமாக அவருக்கு வெற்றியை தரவில்லை. அந்த வெற்றி தங்கலான் படத்தின் மூலம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:புதிய க்ரைம் படத்தில் இணைந்த கன்னங்குழி அழகி.. லைலா ரிட்டர்ன்ஸ்!