சென்னை: நடிகர் விக்ரம், மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்திருந்தார். இதில் விக்ரமின் நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தைத் தொடர்ந்து, விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரமின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தங்கலான் படம் கேஜிஎப் பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இதற்காக விக்ரம் கடுமையான உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்தின் புரொமோஷனுக்காக தங்கலான் படத்திற்கு ஓய்வு கொடுத்திருந்த விக்ரம், படம் வெளியாகி விட்டதால் மீண்டும் தங்கலான் படப்பிடிப்பில் இணைந்தார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.