சென்னை: நடிகர் விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் "வாரிசு" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் ராஷ்மிகா, ஷாம், சரத்குமார், பிரபு, சங்கீதா என நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது.
இதனிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில், வாரிசு திரைப்படத்தின் சில படப்பிடிப்பு காட்சிகள் இணையதளத்தில் கசிந்து வருகிறது. கடந்த மாதம் நடிகர் விஜய் மற்றும் பிரபு நடித்த மருத்துவமனை காட்சி ஒன்று வெளியானது. அதைத் தொடர்ந்து அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் படப்பிடிப்பு காட்சிகள் கசிந்தன. இதனால் நடிகர் விஜய் அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.
அதேபோல் விஜய் மற்றும் ராஷ்மிகா இருவரும் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடும் காட்சிகள் அண்மையில் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனால் செய்வதறியாமல் திகைத்த படக்குழு, பாடல் காட்சி கசிந்த உடனேயே அந்த பாடலை வெளியிட்டது.
'ரஞ்சிதமே' என்ற அந்த பாட்டுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், புகைப்படங்கள் மற்றும் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் கசிவது படக்குழுவுக்கு தலைவலியாக மாறியுள்ளது.
இந்நிலையில் மீண்டும் ஒரு படப்பிடிப்பு காட்சி கசிந்துள்ளது. வாரிசு படத்தின் கிளைமாக்ஸ் காட்சி என அந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. கர்நாடகா மாநிலம் பெல்லாரி அருகே ஒரு காட்டுப் பகுதியில் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.