சென்னை:நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர். இவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சிக்ஸர் அடிப்பவை. விஜய் நடித்த சமீபத்திய படங்கள் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் வெற்றிப் படங்களாக அமைந்தன. கடைசியாக முதல் முறை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கிய வாரிசு படத்தில் நடித்திருந்தார்.
விஜயின் 67-ஆவது படமான 'லியோ' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். 'மாஸ்டர்' படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. மாஸ்டர் படம் லோகேஷ் கனகராஜின் 50 சதவீதம் என்றால் லியோ 100 சதவீதம் லோகேஷ் கனகராஜ் படம் என்று அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
மேலும் இப்படத்தில் த்ரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சுர் அலி கான், ப்ரியா ஆனந்த், கௌதம் மேனன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படம் காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் 2000 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. இந்த பாடல்தான் வருகிற 22ம் தேதி விஜய் பிறந்தநாளை ஒட்டி வெளியாக உள்ளது. இப்பாடலை விஜய் பாடியுள்ளார். இதன் புரோமா வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இப்பாடலில் உள்ள வரிகள் விஜயின் அரசியல் வருகையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 'நா ரெடி' என தொடங்கும் இப்பாடல் 'நா ரெடிதான் வரவா அண்ணன் நான் இறங்கி வரவா', 'சிங்கத்த சீண்டாதப்பா எவர் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா' என அமைந்துள்ளது.
முன்னதாக லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜயின் பிறந்தநாள் அன்று, இப்படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ள தகவலை பதிவிட்டிருந்தார். மேலும் அந்த பதிவு விஜயின் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கிஃப்டாக அமைந்தது. மேலும் #NaaReady என்னும் ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆனது.
இதனை அடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் ட்விட்டர் பக்கத்தில், ஜூன் 22 அன்று வெளியாகும் என அறிவித்திருந்த முதல் பாடலின் முன்னோட்டமான #Readydhavarava என்ற மேற்கோளுடன் வெளியிட்டுள்ளார். அதில் "இப்பாடலை பாடியவர் உங்கள் விஜய்” என பதிவிடப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளைப் பாராட்டி அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை விஜய் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் சுமார் 13 மணி நேரம் நின்று அத்தனை பேருக்கும் பரிசு வழங்கினார் விஜய். விஜயின் இந்த செயல் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது லியோ திரைப்படப் பாடல் வரிகளும் அவரது அரசியல் வரவை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க:"மொத்தம் 10 படம் தான்" - லோகேஷ் கனகராஜின் சினிமா கணக்கு