சென்னை:செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளது.
லியோ திரைப்படம் வரும் 19-ஆம் தேதி வெளியாகிறது. முன்னதாக லோகேஷ், விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில் லியோ படத்திற்கு எதிர்பார்ப்பு அதிக அளவில் காணப்படுகிறது.
லியோ திரைப்பட குழு விஜய் பிறந்தநாள் முதல் படத்திற்கான விளம்பரத்தை தொடங்கியது. நடிகர் விஜய் பிறந்தநாளுக்கு முதல் சிங்கிள் ‘நா ரெடி’ பாடலை வெளியிட்டது. பின்னர் படத்தில் முக்கிய கதாபாத்திரமான சஞ்சய் தத், அர்ஜூன் ஆகியோரது பிறந்தநாளுக்கு அவர்களது கதாபாத்திர போஸ்டர்களை வெளியிட்டது.
விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியோ இசை வெளியிட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டது. இசை வெளியிட்டு விழா ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் கூறப்பட்ட நிலையில், லியோ படக்குழு இசை வெளியிட்டு விழாவிற்கு டிக்கெட் தேவை அதிகமானதால் நடத்த முடியவில்லை எனவும், இதில் அரசியல் காரணங்கள் எதுவுமில்லை எனவும் அறிக்கை வெளியிட்டது.
விஜயின் குட்டி கதையை கேட்க ஆவலோடு இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனையடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படக்குழு லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் 'badass' பாடலை வெளியிட்டது. மேலும் இன்று லியோ படத்தின் டிரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இன்று காலை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக லியோ படத்தில் த்ரிஷா போஸ்டரை வெளியிட்டது.
இந்நிலையில் லியோ டிரெய்லரை திரையரங்கு பார்க்கிங்கில் திரையிட்டு கொண்டாட கூடாது என சென்னை மாநகர காவல்துறை முதலில் தடை விதித்தது. பின்னர் அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் அனுமதி பெற்று டிரெய்லரை திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்யலாம் என சென்னை மாநகர காவல்துறை அறிவித்தது.
இப்படி பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் லியோ படத்தின் டிரெய்லர் அதிரடி சண்டைக் காட்சிகள், ஆபாச வசனம் உள்ளிட்டவைகளுடன் மாலை 6.30 மணிக்கு வெளியிட்டதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் தோன்றுவதாக டிரெய்லரில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு விஜய் நடித்துள்ள லியோ படத்தில் ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகள் அதிகமாக இருக்கும் என டிரெய்லரின் மூலம் தெரிகிறது. மேலும் இந்த டிரெய்லரின் மூலம் லியோ பட கதை குடும்ப செண்டிமென்ட் கதைக் களத்தை கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க: சூடு பிடிக்க தொடங்கிய ‘மார்க் ஆண்டனி’ விவகாரம் - மும்பை சென்சார் போர்டு மீது சிபிஐ விசாரணை!