சென்னை:லைகா ப்ரொடக்ஷன்ஸ் தங்களது தயாரிப்பு நிறுவனம் மூலம் பல்வேறு வெற்றி படங்களை தயாரித்துள்ளது. அவற்றில் பெரிய பட்ஜெட் படங்கள் மூலம் பிரம்மாண்டமான படைப்புகளை பார்வையாளர்களுக்கு அளித்துள்ளது. தங்களது ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் வரும் பல்வேறு புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு தனித்துவமான தயாரிப்பு நிறுவனமாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் வலம் வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகர் விஜய்யின் மகனும், அறிமுக இயக்குநருமான ஜேசன் சஞ்சய் விஜய் இயக்கும் படத்தை தயாரிப்பதில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் மகிழ்ச்சி அடைவதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் கூறுகையில் “லைகா நிறுவனம் ஜேசன் சஞ்சய் விஜய் இயக்கும் படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். டொரோண்டா ஃபிலிம் ஸ்கூல் மற்றும் லண்டனில் சஞ்சய் திரைப்பட இயக்கத்தில் பிஏ, மற்றும் டிப்ளமோ படிப்புகளை முடித்துள்ளார்.
அவர் எங்களிடம் கதை கூறிய போது, அந்த கதையில் மக்களை மகிழ்விப்பதற்கான அனைத்து சாத்திய கூறுகளும் இருந்தது. இந்த படத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்து வரும் பல நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இயக்குநர் ஜேசன் சஞ்சய் விஜய் பேசுகையில் “எனது முதல் படத்தை மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ் மூலம் இயக்குவதில் பெருமை கொள்கிறேன்.
எனது படத்தில் பணியாற்ற தற்போது தமிழ் சினிமாவில் வலர்ந்து வரும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். இந்த வாய்ப்பு வழங்கிய சுபாஸ்கரன் சாருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் நான் இந்த படம் இயக்குவதற்கு பக்கபலமாக இருக்கும் தமிழ் குமரனுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
ஜேசன் சஞ்சய் விஜய் டொரொன்டொ திரைப்பட பள்ளியில் திரைப்பட தயாரிப்பில் டிப்ளமோ (2018 - 2020) படிப்பும், லண்டனில் திரைப்பட இயக்கத்தில் பிஏ படிப்பும் (2020 - 2022) முடித்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது. லைகா நிறுவனம் வெளியிட்ட இந்த திடீர் அறிவிப்பு விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இதையும் படிங்க: இரண்டு வீடுகளுடன் அமர்க்களமாக தொடங்கும் பிக்பாஸ் சீசன் 7... ’launch promo’ வெளியீடு!