சென்னை: டிப்ஸ் பிலிம்ஸ் & மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் - ரமேஷ் தாரணி தயாரித்து, இயக்குநர் ஸ்ரீ ராம் ராகவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படம் மெரி கிறிஸ்துமஸ். இப்படத்தில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மெரி கிறிஸ்துமஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பு, சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சஞ்சய் கபூர், சண்முகராஜன், நடிகைகள் கத்ரினா கைஃப் மற்றும் தீபா வெங்கட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "நம் வாழ்க்கையில் சில நல்ல விஷயங்கள் நம்மை கேட்காமல் வந்து விடும். இயக்குநர் ஸ்ரீ ராம், 96 படம் பார்த்து விட்டு என்னை கூப்பிட்டுப் பேசினார். எனக்கு இயக்குநர் ஸ்ரீ ராமுடன் வேலை செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. மெரி கிறிஸ்துமஸ் படம் பண்ணலாம் என்று கதை சொன்னார்” என்றார்.
இதன் தொடர்ச்சியாக இந்தி பேசும்போது எப்படி இருந்தது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "நான் துபாயில் இருக்கும் போதே, அங்கு இந்தி பேசுவேன். தற்போது நான் இந்தி பேசியே 17 வருடம் ஆகிவிட்டது. இன்னும் இந்தி கொஞ்சம் முன்ன பின்னதான் இருக்கிறது. துபாயில் வேலை பார்த்ததால்தான் இந்தி ஓரளவுக்கு பேச முடிந்தது” எனக் கூறினார்.
இப்போது இந்தி சினிமா தமிழ் நடிகர்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்ற கேள்விக்கு, "நான் இந்தியில் 5 படம் பண்ணி விட்டேன். ரொம்ப கம்போர்டபிலாக இருந்தது. நிறைய படங்கள் எல்லா மொழியிலும் வருகிறது" என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் இந்தி குறித்த கேள்விக்கு, "ஏன் இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்கள்? இங்கு இந்தியைப் படிக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. திணிக்க வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இங்கு இந்தி படிக்கிறவர்களும் இருக்கிறார்கள். அதற்கான விளக்கத்தை அமைச்சர் பி.டி.ஆர் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்" என்றும் கூறினார்.
இதையும் படிங்க:அசோக் செல்வன் நடித்துள்ள புளூ ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!