யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடித்துள்ள திரைப்படம் பதான். ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார்.
வரும் 25ஆம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், கடந்த மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே, நல்ல வரவேற்பை பெற்றது. இதுமட்டும் இன்றி கடந்த மாதம் வெளியான படத்தின் ’பேஷரம் ரங்’ பாடல் பெரும் சர்ச்சைக்கு ஆளானது.
இந்நிலையில் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள ’பதான்’ திரைபடத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் தமிழ் ட்ரைலரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், தெலுங்கு ட்ரைலரை நடிகர் ராம்சரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து ஷாருக்கானின் கடந்த சில படங்கள் தொடர் தோல்வியை தழுவி வந்த நிலையில், இந்த பதான் படத்தின் ட்ரைலர் ரசிகர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. மேலும் ஷாருக்கானின் முழு நீள ஆக்ஷன் படமாக, இத்திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் ட்ரைலரில் இடம்பெற்றுள்ள ஆக்ஷன் காட்சிகள், ரசிகர்கள் மத்தியில் படத்திற்காண எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பதான் படத்தை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான், தமிழ் இயக்குநர் அட்லீயுடன் ’ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின, அதே சமயத்தில் தான் இயக்குநர் அட்லீ, ஷாருக்கான் மற்றும் விஜய் ஆகியோர் சந்தித்துகொண்ட புகைப்படமும், சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.
மேலும் விஜய்யுடன் நெருங்கிய இயக்குநராக இருக்கும் அட்லீயின் படத்தில் ஷாருக்கான் நடித்து வரும் சூழலில், தற்போது ஷாருக்கானின் ’பதான்’ பட ட்ரைலரை விஜய் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வாரிசு, துணிவு பட வெளியீட்டில் ரூ.3,000 கோடி கொள்ளை? - பரபரப்பு புகார்!