சென்னை:நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்களுக்கு மத்தியில் இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன் மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் இத்திரைபடம் வெளியாகிறது.
இந்த நிலையில், நேற்று நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பார்வை மற்றும் ‘நா ரெடி’ என்ற பாடல் வெளியாகி, தற்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது. ஆனால், பாடலில் இடம் பெற்ற சில வரிகள் மற்றும் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சமீபத்தில் கூட தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய விஜய், அந்த விழாவில் பேசும்போது, காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடாதீர்கள் என்றும், அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்றவர்களைப் பற்றி படியுங்கள் என்றும் தெரிவித்தார்.