சென்னை: நம் நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் தான் ஐந்து முதலமைச்சர்களை திரைத்துறையில் இருந்து பெற்றுள்ளது. அண்ணா தொடங்கி கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, தற்போது முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் வரை ஏதோ ஒரு விதத்தில் இவர்கள் திரைத்துறையில் பங்காற்றி உள்ளனர். அந்த வரிசையில் இவரும் வருவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்படும் நடிகர் விஜய், இன்று தனது 49ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
தந்தையின் தயவால் சினிமாவில் ஹீரோவானவர் என்று கூறப்பட்டு வந்தாலும் இந்த இடத்தை அடைய அவரது கடின உழைப்பு அளப்பரியது. 'இது எல்லாம் ஒரு மூஞ்சியா' என்றவரின் வாரிசுகள் இதே மூஞ்சியை அவர்களது வாகனத்தில் வீட்டில் ஒட்டி அழகு பார்த்து வருகின்றனர். ஒல்லியான உடல்வாகு என கிண்டல் செய்யப்பட்டவர் அதே ஒல்லியான உடலை வைத்து தான் அற்புதமாக நடனம் ஆடினார். ஆக்ஷனில் தனித்துவம் காட்டினார்.
ஆரம்பத்தில் காதல் படங்களாக நடித்து வந்தவர் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை என அற்புதமான படங்களில் நடித்து குடும்பங்களில் ஒருவராக மாறினார். அதனைத்தொடர்ந்து ப்ரியமுடன் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் புதுமையான நடிப்பை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து சில பல தோல்விகளுக்குப் பிறகு, 2000ஆம் ஆண்டு தொடக்கத்தில் ரமணா இயக்கத்தில் நடித்த திருமலை படம் தான் விஜய்யின் திரை வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது.
அதுவரையில் சாந்தமான நடிகராக இருந்த விஜய் ஆக்ஷன் அதிரடி கதாபத்திரத்தில் அதகளம் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய்யை தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மாற்றியது, திருமலை திரைப்படம். அதனைத் தொடர்ந்து போக்கிரி, திருப்பாச்சி, கில்லி, சிவகாசி என மெகா ஹிட் படங்களைக் கொடுத்தார். பிறகு ஆதி, சுறா போன்ற படங்களில் சறுக்கல்களை சந்தித்தாலும் துப்பாக்கி என்ற மெகா ஹிட் படம் மூலம் மீண்டு வந்தார்.
ஒரே மாதிரியான ஆக்ஷன் கதாபாத்திரங்களில் விஜய் நடிக்கிறார் என்ற விஜய் மீது ஏற்பட்ட களங்கத்தை தகர்க்கும் வகையில், கத்தி படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தார். பின்னர் தெறி, மெர்சல் போன்ற வெற்றி படங்களில் விஜய் நடித்தாலும் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்த ஜேடி (JD) கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
கடந்த ஜூன் 17ஆம் தேதி நடிகர் விஜய் கொடுத்த கல்வி விருதுகள் இரண்டு வாரமாக இணையத்தின் பேசுபொருளாக மாறியிருக்கிறது. எந்தவொரு பணியாளர்களும் இல்லாமல் 13 மணி நேரம் அந்த விழாவில் நின்று அத்தனை பேருக்கும் விருது வழங்கினார். விஜய்யின் அரசியல் விஜயத்திற்கான முன்னோட்டம் இது என்பது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்திருந்தது. விஜய்யின் அரசியல் அடித்தளம் இப்போது அல்ல எப்போதே தொடங்கியது தான். 2008லிருந்து விஜய்க்கும் அரசியலுக்குமான ஆட்டம் தொடங்கியது.
விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சியின் திட்டமும் ஆரம்பத்தில் இருந்தே அதுவாகத்தான் இருந்தது. அதன் முதல்படி தான் 2008ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி தனது 35வது பிறந்தநாளை கொண்டாடிய விஜய், அன்றைய தினம் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றி, அதற்கென ஒரு கொடியையும் அறிவித்தார். சென்னை பல்கலைக்கழக மண்டபத்தில் 'உழைத்திடு... உயர்ந்திடு... உன்னால் முடியும்' என்கிற ஸ்லோகனோடு தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டது.