தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வங்கிக் கடன் தற்கொலைக்கு சமம் - நடிகர் உதயா அறிக்கை

நடிகர் சங்க கட்டடம் கட்ட வங்கிக்கடன் பெறுவது தற்கொலைக்கு சமம் என்று நடிகர் உதயா தெரிவித்துள்ளார்.

வங்கிக் கடன் தற்கொலைக்கு சமம் - நடிகர் உதயா அறிக்கை.
வங்கிக் கடன் தற்கொலைக்கு சமம் - நடிகர் உதயா அறிக்கை.

By

Published : May 10, 2022, 12:30 PM IST

சென்னை: இதுகுறித்து உதய வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் திரு விஷால் அவர்களுக்கு , நான் நடிகர் உதயா. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில், சக நடிகர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் சார்பில் இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்.

நடிகர் சங்க தேர்தலில் தங்கள் அணி வெற்றி பெற்றதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிறன்று சென்னையில் நடைபெற்றது. தங்களது அணியின் வெற்றி குறித்த மாற்றுக்கருத்துக்கு இடையிலும் சங்கத்தின் ஒற்றுமை மற்றும் நலன் கருதி தேர்தலில் தங்களை எதிர்த்து போட்டியிட்ட அணியை சேர்ந்தவர்களும் இக்கூட்டத்தில் முழுமனதுடன் கலந்து கொண்டோம். சங்கத்தின் வளர்ச்சிக்காக ஆதரவளிக்கவும் தயாராக இருக்கிறோம், இருப்போம்.

தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டவர்களே இத்தனை பெருந்தன்மையாக இருக்கும் போது, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தற்போது அனைவருக்கும் பொதுவான பொறுப்பில் இருக்கும் நீங்கள், பெருந்தன்மையுடன் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் கூட்டத்தில் பேசிய நீங்கள் அதை ஏதோ மூன்றாம் தர அரசியல் மேடை போல ஆக்கியதோடு, சங்கத்தின் மாண்பையும் குறைத்து விட்டீர்கள்.

ஜனநாயக முறைப்படி உங்களை எதிர்த்து போட்டியிட்டவர்களை வைரஸ் என்று வர்ணித்தீர்கள். கரோனா காலத்தில் மட்டுமில்லாமல் சங்க உறுப்பினர்களில் எப்போதும் உழைப்பவர்கள் யார், உதவுபவர்கள் யார் என்பதை நம் அனைத்து உறுப்பினர்களும் அறிவார்கள். மேலும், தமிழ் திரையுலகின் வைரஸ் யார் என்பதையும் அனைவரும் அறிவார்கள், அறிந்தே உள்ளார்கள். உங்கள் பெயரும், வைரஸும் 'வி' எனும் ஆங்கில எழுத்தில் தொடங்குவதால் உங்களுக்கு அதன் மேல் அத்தனை பற்று போலும்.

அது மட்டுமா? பல்லாண்டு கால சீரிய முயற்சிகளுக்குப் பின்னர் சங்கத்தை கடனில் இருந்து மீட்ட நிலையில், கடன் சூழலில் அதை மீண்டும் சிக்க வைக்கும் வகையில் வங்கிக் கடன் வாங்கி கட்டிடம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அனைத்து உறுப்பினர்களையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த முடிவு தற்கொலைக்கு சமமானது. இதனால் வறுமையில் வாடும் நமது உறுப்பினர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.

சங்க கட்டிடத்தை நடிகர்களாகிய நாமே நம்மால் இயன்ற பங்களித்து கட்டி முடிக்க முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி செய்தால் மட்டுமே அதில் வரும் வருவாயைக் கொண்டு நலிந்த கலைஞர்களுக்கு உதவ முடியும், நம் மூத்தோர்களின் ஆன்மாக்களையும், மனங்களையும் குளிர்விக்க முடியும்.

எனவே, மேற்சொன்ன கருத்துகளை எதிர்மறை விமர்சனமாக பார்க்காமல், நம் அனைவரின், நம் சங்கத்தின் நலனுக்கான ஆக்கப்பூர்வ ஆலோசனையாக எடுத்துக் கொண்டு அனைவரின் கருத்துகளுக்கும் மதிப்பளித்து சங்கத்தின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்வீர்கள் என்று நம்புகிறோம். தங்கள் நேர்மறை நடவடிக்கைகளுக்கு என்றும் ஆதரவளிக்க தயாராகவே உள்ளோம்" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அருண் விஜய்- சிவகார்த்திகேயன் சர்ச்சைகளின் பின்னணி

ABOUT THE AUTHOR

...view details