சிவாஜியை பற்றி எழுத என் பேனாவுக்கு அனுபவம் பத்தாது. தனது நடிப்பு ஆற்றலால் தமிழ்நாடு மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்ற நடிப்பு சகாப்தம் சிவாஜிகணேசன் 21.7.2001 அன்று, தனது 74வது வயதில் மரணம் அடைந்தார். எத்தனை படங்கள், பல்வேறு வேடங்கள் என சினிமா ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்ட மகா கலைஞன். எந்த கதாபாத்திரம் ஏற்றாலும் அதில் சிவாஜியை ஒருபோதும் பார்க்க முடியாது. அந்த கதாபாத்திரமாக நம் கண்முன் தோன்றி நடித்துக்கொண்டிருப்பார்.
அவ்வளவு ஏன் நம் நாட்டின் வரலாறு நாயகர்களை சிவாஜி வழியாகத்தான் நமது தலைமுறைகளுக்கு தெரியும். கட்டபொம்மன், ராஜராஜ சோழன், வ.உ.சி, கர்ணன் இவர்களை எல்லாம் நாம் நேரில் பார்த்தது இல்லை. ஆனால் இவர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள், வாழ்ந்திருப்பார்கள் என்பதை திரையில் நமக்கு காட்டிய மாமேதை இந்த சிவாஜி கணேசன்.
1952ஆம் ஆண்டு கருணாநிதி திரைக்கதை, வசனத்தில் வெளியான பராசக்தி மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தது சிவாஜி என்னும் புயல். முதல் படத்திலேயே சுழன்றடித்தார். கருணாநிதியின் வசனத்தில் சிவாஜி பேசிய ஒவ்வொரு வசனங்களும் தீப்பொறியாக இருந்தன. அதுவும் அந்த நீதிமன்ற காட்சி இப்போது பார்த்தாலும் பார்ப்போர் மனம் சற்று ஆவேசமடையும். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 280க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அதுவும் தமிழில் 250 படங்களில் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி. கம்பீர குரல், உணர்ச்சிகரமான நடிப்பு என நடிப்பிற்கான இலக்கணமாக திகழ்ந்தவர். 1960ல் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்ரிக்க-ஆசிய விழாவில் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார். இதன் மூலம் சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருது பெற்ற முதல் நடிகர் சிவாஜி தான். மேலும் இந்திய அரசாங்கத்தின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் திரைப்பட துறையின் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே போன்ற விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய நடிகர் ஆவார்.
காமெடி, காதல், குடும்ப படங்கள் என கணக்கிலடங்காத படங்களில் நடித்து நம் மனங்களில் நீங்கா இடம் பிடித்தார். தனது முதுமை காலத்தில் இப்போது உள்ள நடிகர்களுடன் நடித்து அதிலும் தனது தனித் தன்மையை நிரூபித்தார்.
ஒன்ஸ்மோர் படத்தில் விஜய்யுடன், ரஜினியுடன் நான் வாழ வைப்பேன், விடுதலை, படிக்காதவன், படையப்பா, கமலுடன் நாம் பிறந்த மண், தேவர் மகன் ஆகிய படங்களில் நடித்தார். எம்ஜிஆர் உடன் கூண்டுக்கிளி என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்தார். இவர் பெற்ற விருதுகளையும் சிறப்புகளையும் சொல்லிக்கொண்டே போகலாம்.