சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் படம் 'கங்குவா'. சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, உலக மொழிகள் அனைத்திலும் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் 42வது படமாக உருவாகும் இதில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.
கங்குவா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ. ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரிக்கிறார். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கங்குவா படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்துள்ள ஈவிபி பிலிம் சிட்டியில், சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், நேற்று (நவ. 22) இரவு படப்பிடிப்பின் போது கேமரா ரோப் அறுந்து கேமரா சூர்யாவின் எதிர்புறமாக தோள்பட்டை மீது வேகமாக மோதியுள்ளது. இதில நடிகர் சூர்யா அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் இன்றி உயிர் தப்பியுள்ளார். இது குறித்து சண்டைப் பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் கூறும் போது, கேமரா ரோம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் நடிகர் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தான் நலமுடன் இருப்பதாக எக்ஸ் தளத்தில் நடிகர் சூர்யா பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் "நண்பர்கள், நலம் விரும்பிகள், அன்பான ரசிகர்களே விரைவில் குணமடைய வேண்டி நீங்கள் அனுப்பிய மெசேஜ்களுக்கு மனமார்ந்த நன்றி. நலமுடன் இருக்கிறேன். உங்கள் அன்புக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கங்குவா படப்பிடிப்பு தளத்தில் விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய சூர்யா!