நடிகர் சூர்யாவின் இயற்பெயர் சரவணன். தமிழ் சினிமாவில் என்றென்றும் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படும் நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் என்ற அடையாளத்தோடு இருந்தாலும், சூர்யாவுக்கு சினிமாவில் நடிக்க துளியும் விருப்பமில்லை. வசந்த் இயக்கத்தில் அஜித் நடித்த 'ஆசை' படத்தில் நடிக்க முதலில் சூர்யாவை அழைத்தார்கள். ஆனால், அதில் ஆசையின்றி மறுத்தார். சினிமா ஆசையே இல்லாமல் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் சிறிது காலம் வேலை செய்தார்.
பிறகு இயக்குநர் வசந்த் இயக்கிய 'நேருக்கு நேர்' படத்திற்கு மீண்டும் ஒரு புதுமுகத்தை தேடிவந்தார். பின்னர், அவர் சூர்யாவை இதில் நடிக்க வைத்தார். இப்படித்தான் சரவணன் என்கிற சூர்யா தமிழ் சினிமா உலகிற்குள் நுழைந்தார். முதல் படமே விஜயுடன் இணைந்து நடித்தார். சூர்யாவுக்கு அப்போது நடிப்பின் மீது ஆர்வம் இல்லாததால் அப்படத்தில் அவரது நடிப்பு கேலிக்குள்ளானது.
'ரொம்ப சொதப்பீட்டிங்க':சூர்யா குறித்து நடிகர் சிவக்குமார் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, "சூர்யாவுக்கு நான்கு வார்த்தைகள் கோர்வையாக பேச வராது. படிப்பும் வராது. அவனது முதல் படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் அவனிடம் வந்து 'ரொம்ப சொதப்பீட்டிங்க' என்று சொன்னார்கள்" என்றார்.
அதுதான் அவனது முதல் விமர்சனம் என்றும் பேசினார். நடிப்பு வரவில்லை, நடனமும் தெரியாது, நடிகரின் மகன் என்பதால் நடிக்க வந்துவிட்டார் என்று பலரும் விமர்சித்தனர். 'நேருக்கு நேர்' படத்தை தொடர்ந்து 'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'பெரியண்ணா', 'பிரண்ட்ஸ்' என சில படங்களில் நடித்தார்.
முரட்டு இளைஞனாக மிரட்டிய 'நந்தா':ஆனால், பாலாவின் இயக்கத்தில் நடித்த 'நந்தா' படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதுவரை கேலி செய்தவர்களிடம் தன்னை நிரூபித்து காட்டினார். முரட்டு இளைஞனாக மொட்டை அடித்துக்கொண்டு நடிப்பில் தூள் கிளப்பினார். அதன் பிறகு தான் சூர்யா என்னும் நடிகன் ரசிகர்களுக்கு மத்தியில் பரிட்சயமானார்.
என்றென்றும் அன்புசெல்வன் ஐபிஎஸ்: அதனை தொடர்ந்து, கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த 'காக்க காக்க' சூர்யாவின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியது. இன்றுவரை சூர்யாவின் முக்கிய படங்களின் வரிசையில் 'காக்க காக்க' படத்திற்கும் இடமுண்டு. பிறகு மீண்டும் பாலாவுடன் 'பிதாமகன்' படத்தில் இணைந்தார்.
சூர்யாவுக்குள் அபாரமான நகைச்சுவை கலைஞன் இருப்பதை தமிழ் சினிமா ரசிகன் கண்டுகொண்ட தருணம் அது. 'பேரழகன்' படத்தில் கூன் விழுந்த கதாபாத்திரத்தில் தனது உடலை வருத்திக்கொண்டு நடித்து புதிய உச்சம் தொட்டார்.