மும்பை: "பியார் கா பஞ்ச்னமா" படம் மூலம் கடந்த 2011ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான சோனாலி செய்கல் அதனை தொடர்ந்து ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டும் இன்றி மாடலிங் துறையில் மிகுந்த ஈடுபாடு உள்ள சோனாலி செய்கலுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமும் உள்ளது. இந்நிலையில் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த சோனாலி செய்கல் கடந்த 5 வருடங்களாக தொழிலதிபரான ஆஷேஷ் எல் சஜ்னானி என்பவரை காதலித்து அவருடன் லிவிங் டுகெதர் வாழ்கையில் இருந்தார்.
இதனை தொடர்ந்து ஆஷேஷ் எல் சஜ்னானியை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த சோனாலி செய்கல் இது தொடர்பான அறிவிப்பை ரகசியமாக வைத்திருந்தார். இந்நிலையில் சோனாலி செய்கல் மற்றும் ஆஷேஷ் எல் சஜ்னானி ஆகியோருக்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இன்று திருமணம் நடந்துள்ளது.
மும்பையில் உள்ள குருத்வாராவில் நடைபெற்ற இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மணமக்கள் இருவரும் வெள்ளை மற்றும் பிங்க் நிற ஆடையில் ஜொலிக்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. அது மட்டுமின்றி திருமணம் நடைபெற்ற இடம் முதல் அங்கு உள்ள அலங்காரங்கள் வரை அனைத்தும் அதே பிங்க் மற்றும் வெள்ளை நிறத்தில் மிக பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.