சென்னை:இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்து சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படம் வெளியிட்ட இடமெங்கும் திருவிழா போல ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகின்றது.
இந்த நிலையில், இப்படம் இதுவரை ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பு பெரிதும் பேசப்பட்டன. விஷாலின் அப்பா, மகன் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படம் வெளியிடப்பட்ட அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு மற்றும் நல்ல வசூல் கிடைத்துள்ளது.
இதனை கொண்டாடும் வகையில், இன்று (செப்.21) மார்க் ஆண்டனியின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விஷால், எஸ்.ஜே. சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன், தயாரிப்பாளர் வினோத் குமார், நிழல்கள் ரவி, இப்படத்தில் சில்க் வேடத்தில் நடித்த விஷ்ணுப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவின் தொடக்கத்தில் விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, விழாவில் பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா, “படத்தை முதலில் சொல்லும்போது நான் வயதான கதாபாத்திரம் என்று சொன்னதால் கதை கூட கேட்காமல் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இப்போது தான் எப்படியோ இந்த நிலைக்கு வந்துள்ளேன். இதில், வயதான கெட்டப்பா என்று நினைத்து மறுத்துவிட்டேன்.