நடிகர் சிம்பு இன்று (பிப்.3) தனது 40 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சகலகலா வல்லவன் டி.ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். டி.ராஜேந்தர் சிம்புவை ஆரம்பம் முதலே சினிமாவில் செதுக்கி வந்தார். தனது 'உறவைக் காத்த கிளி' படம் மூலம் 1984 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.
ஆரம்ப காலம்: 'ஐ அம் லிட்டில் ஸ்டார்' பாடல் என ஒரு சிறிய பையனுக்கு எண்டரி பாடல் வைத்தது என்றால், அது சிம்புவிற்கு மட்டுமே. இன்று வரை அது போன்று யாருக்கும் வைத்ததே இல்லை எனலாம். அதன் பிறகு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகக் கலக்கினார். அதன் பிறகு 'காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து வெளியான தம், அலை உள்ளிட்ட படங்களில் விரல்களை மடக்கி வித்தை காட்டினார். அக்காலகட்டத்தில் சிம்பு செய்யும் விரல் வித்தையை அன்றைய இளைஞர்கள் பின்பற்றினார்கள். சிம்புவின் உடை, கையில் கயிறு கட்டுவது காதில் கம்மல் மாட்டுவது என எல்லாமே ட்ரெண்ட் ஆனது.
சிலம்பரசன் என்ற இயற்பெயருடன் தமிழில் அறிமுகமான சிம்புவை, இப்போது எஸ்.டி.ஆர் என்ற புனைப் பெயரில் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். அதோடு நடிப்பு என்ற வட்டத்திற்குள் மட்டுமே நின்றுவிடாமல் கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர், சிறப்பாக நடனமாடுபவர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமையைக் கொண்டவராக திகழ்கிரார்.
ஹிட் படங்கள்: கடந்த 2004-ஆம் ஆண்டில் வெளியான 'மன்மதன்' மற்றும் சிம்பு இயக்கிய 'வல்லவன்' ஆகிய படங்கள் அதிரி புதிரி ஹிட்டடித்து. இதுவரை 30 படங்கள் நடித்திருக்கிறார். அதில் பெரிய அளவில் அவருக்கு வெற்றியைத் தந்த படங்கள் என்றால் மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா, தொட்டி ஜெயா, மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு என கூறலாம்.
நல்ல நடிகராக இருந்தாலும் இவருக்குத் திரும்பிய பக்கம் எல்லாம் பிரச்சினைகளும் சர்ச்சைகளும் தொடர்ந்தன. எந்த பக்கம் திரும்பினாலும் சர்ச்சை தான். அவர் பார்க்காத வெற்றியும் இல்லை அவர் பார்க்காத தோல்வியும் இல்லை. இப்படி ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியதால் ஒருகட்டத்தில் ரெட் கார்டு கொடுக்கும் நிலை ஏற்பட்டது.
தொடர் சர்ச்சை: சிம்பு என்றாலே சிக்கல் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. இவர் எழுதி பாடிய பீப் சாங் மாதர் சங்கத்தினரின் கண்டனத்திற்கு உள்ளாகியது. ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்தும் இவர் பேசினார். பின்னர் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் இடம் பெற்ற ரெட் கார்டு பாடல் மூலம் பதிலடி கொடுத்தார்.