நடிகர் விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’:தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் நீண்டநாள் கனவான ‘கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ திரைப்படம் நேற்று (ஆகஸ்ட் 19) ஸ்ரீ காளஹஸ்திரி கோயிலில் பூஜையுடன் தொடங்கியது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘மஹாபாரதம்’ தொடரை இயக்கிய முகேஷ் சிங் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
சிவபெருமானின் அசைக்க முடியாத பக்தரான கண்ணப்பாவின் காலத்தால் அழியாத சரித்திரம் மற்றும் பக்தியை பிரமாண்டமான திரைக்காவியமாக மக்களுக்கு கொடுக்கும் முயற்சியில் நடிகர் விஷ்ணு மஞ்சு ஈடுபட்டார். 24 ஃபிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர். மோகன் பாபு தயாரிப்பில் மிகப்பெரிய பொருட் செலவில் பிரமாண்டமான காவியமாக உருவாக இருக்கும் இப்படத்தில், கண்ணப்பா வேடத்தில் விஷ்ணு மஞ்சு நடிக்கிறார்.
கதையின் நாயகியாக நுபுர் சனோன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள். பிரபல எழுத்தாளர்கள் பருச்சுரிகோபாலகிருஷ்ணா, தோட்டா பிரசாத், தோட்டப்பள்ளி சாய்நாத், புர்ரா சாய் மாதவ் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். மணிசர்மா மற்றும் ஸ்டீபன் தேவஸ்ஸே படத்திற்கான இசையமைக்கின்றனர். ஷெல்டன் ஷா ஒளிப்பதிவு செய்ய, சின்னா கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
உண்மையும், மர்மமும் கலந்த ஹாரர் படம் 'டீமன்'(Demon):உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் ஹாரர் படம் 'டீமன்'. அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் சச்சின், அபர்ணதி, 'கும்கி' அஸ்வின், உள்ளிட்ட பலர் நடிப்பில் அடுத்த மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை ஆர். சோமசுந்தரம் தயாரிக்க, பிளாக்பஸ்டர் புரொடக்ஷன்ஸ் B. யுவராஜ் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் வெளியிடுகிறார். மேலும் படத்தை, இயக்குநர் வசந்தபாலன் உடன் இணைந்து வழங்குகிறார்.
படம் குறித்து இயக்குநர் ரமேஷ் பழனிவேல் கூறுகையில், “இயக்குநர் வசந்தபாலனிடம் 'அங்காடித்தெரு' படம் துவங்கி இப்போது வரையிலும் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறேன்.' டீமன்' என்னுடைய முதல் திரைப்படம். டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 நபர்கள் ஒன்றாக இணைந்து மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ஹாரர் படம் தான் இந்த 'டீமன்'.
மேலும் பல்வேறுபட்ட மர்ம நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. ஆர்.எஸ்.அனந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய, ரவிக்குமார் படத்தொகுப்பை கவனிக்கிறார். சமீபத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளைப் பெற்ற 'அஸ்வின்ஸ்' திரைப்படத்தில் இசைக் கலவை செய்த ரோனி ரபேல், இந்தப் படத்தின் இசை மற்றும் பின்னணி இசையை அற்புதமாக உருவாக்கியிருக்கிறார். நிச்சயம் இந்த படத்தின் பின்னணி இசை மற்றும் ஒலிக்கலவை காரணமாகவே சிறந்தத் திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.
சத்யராஜின் வெப்பன் படத்தை பாராட்டிய வடிவேலு:மில்லியன் ஸ்டுடியோ MS மன்சூர் வழங்கும் A குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்துள்ள படம் ‘வெப்பன்’ (Weapon). நடிகர் சத்யராஜின் அடுத்தடுத்த படங்களின் வரிசை என்பது நம்பிக்கைக்குரிய மற்றும் எதிர்ப்பார்ப்புகளைத் தூண்டுவதாக இருக்கிறது. அந்த வகையில் அவருடைய ‘வெப்பன்’ திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.
படத்தில் மற்றொரு கதாநாயகனாக வசந்த் ரவி நடித்துள்ளார். சஸ்பென்ஸ் - ஆக்ஷன் த்ரில்லர் கதையை அடிப்படையாக கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் மலைப் பிரதேசம் போன்ற இடங்களில் நடைபெற்றது. புதிய டெக்னாலஜியில் உருவாகியுள்ள இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.