கிக் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் சந்தானம் மற்றும் மன்சூர் அலிகான் சென்னை:இயக்குநர் பிரஷாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் கிக். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அர்ஜூன் ஜன்யா இசை அமைத்து உள்ளார். இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றிரவு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சந்தானம், நடிகை தான்யா ஹோப், ராகினி திரிவேதி, செந்தில், மன்சூர் அலிகான், இயக்குநர் பிரசாந்த் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், "கன்னடத்தில் இருந்து வந்து தமிழகத்தில் படம் எடுப்பது சாதாரண விஷயம் இல்லை. படப்பிடிப்பு தளம் மிகவும் ஜாலியாக இருக்கும். சந்தானம் உடலை வருத்தி இந்தப் படத்தில் நடித்து உள்ளார். எனக்கு பிரியாணி, சிக்கன் என நிறைய வரும். கேரவனில் உட்கார்ந்து வெட்டு வெட்டுனு வெட்டுவோம். ஆனால் சந்தானத்திற்கு எதுவும் வராது.
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதால் இவருக்கு தனியாக பயறு, சூப் தான் உணவாக கொடுப்பார்கள். சொல்லி அடிக்கிறார் சந்தானம். சினிமாவை விளையாட்டாக எடுத்துக் கொள்ள கூடாது. ஏகப்பட்ட பிரச்சினைகளுடன் மக்கள் தூங்குகிறார்கள். டிடி ரிட்டர்ன்ஸ் மிகவும் கலகலப்பாக இருந்தது. கிக் இல்லாமல் வாழ்க்கையே இல்லை. சந்தானத்திற்கு பொறுப்பு அதிகரித்து உள்ளது.
அதனை 100 சதவீதம் செய்து வருகிறார். நீங்கள் நினைக்கிற அரசியல் தலைவர்கள் எல்லாம் பூஜ்ஜியம். நாங்க தான் ரியல்" என்று மன்சுர் அலிகான் கூறினார். அதன் பின்னர் பேசிய நடிகர் சந்தானம், "டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இயக்குநரின் பேச்சு, மொழி எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. இது அவருடைய படம். நான் இதில் நடித்து உள்ளேன். என்னை எப்படி பயன்படுத்த முடியுமோ அவ்வாறு பயன்படுத்தி உள்ளார்.
சாதாரண கதை தான் இது. நாயகனுக்கும் நாயகிக்கும் இடையேயான ஈகோ தான் கதை. இது போன்ற படங்கள் நிறைய வெற்றி பெற்று உள்ளது. விஜய் நடித்த குஷி படம் போலத் தான் இந்தப் படமும் இருக்கும்" என்று கூறினார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் சந்தானம், "நின்று போன படங்களை மீண்டும் எடுக்கும் போது நிறைய பிரச்சினைகள் வரும். அதற்கு புதிதாக ஏதாவது படத்தை எடுத்து விட்டு போகலாம்.
ஒரு பாடலில் பெண்களுடன் நடனம் ஆடுவது போல் செந்தில் அண்ணனுக்கு வாய்ப்பு கிடைத்தது. உடனே கவுண்டமணி அண்ணனுக்கு போன் செய்து இதைக் கூறினார். கேரவனுக்கு வந்து இவ்வளவு வருசத்தில் யாரும் எனக்கு இப்படி ஒரு ரோல் கொடுத்தது இல்லை தம்பி என்று கூறினார். உதயநிதி ஸ்டாலின் எனது நண்பர். அவர் எது செய்தாலும் அதற்கு எனது வாழ்த்துகள். எனக்கு அரசியல் ஆசை இல்லை" என்று சந்தானம் தெரிவித்தார்.
இதையும் படிங்க:“உனக்கு சினிமாவில் நடிக்கிறதுக்கு தகுதியே இல்லன்னாங்க” - சந்திரமுகி 2 விழாவில் வடிவேலு பேச்சு!