சென்னை:சென்னை அண்ணா நகரில் உள்ள எஸ்பிஓஏ பள்ளியில் கலை மற்றும் கலாசார நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை மாநகரில் செயல்பட்டு வரும் 50 தனியார் பள்ளிகளில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நகைச்சுவை நடிகர் சந்தானம் கலந்து கொண்டார். தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு நடிகர் சந்தானம் பரிசுக்கோப்பைகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து விழாவில் பேசிய சந்தானம், மாணவர்களிடையே தனது பள்ளிக்கால பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். தாம் பள்ளிப்பருவத்தில் ஒரு பெண்ணை மிகவும் தீவிரமாக காதலித்ததாகவும், அந்த பெண் தனக்கு படிப்பு சுத்தமாக வரவில்லை என்ற காரணத்தினால் தன்னை வேண்டாம் என மறுத்ததாகவும் தெரிவித்தார்.
அதனால் நன்றாகப் படித்து அந்தப் பெண்ணை காதலை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்பதற்காகவே வைராக்கியத்துடன் படித்து எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாகவும், ஆனால் தான் காதலித்த அந்தப் பெண் எட்டாம் வகுப்பில் தோல்வி அடைந்துவிட்டதாகவும் கூறினார்.