சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்களின் படங்களை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடும் போக்கு நீண்ட காலமாக இருந்து வருகிறது. நட்சத்திரங்கள் மாறினாலும் இந்த ட்ரெண்ட் எப்போதும் மாறவில்லை. ஒரு நடிகருக்கு மற்றொரு நடிகர் போட்டி என்ற கோணத்தில், ரசிகர்களும் பிரிந்து நின்று சண்டைப் போட்டுக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது.
சான்றாக, தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக திகழும் விஜய் மற்றும் அஜித் குமாரை சொல்லலாம். இவர்களது படங்கள் வெளியாகும்போதெல்லாம் இருவரது ரசிகர் கூட்டம் சண்டையிடுவது தவிர்க்க முடியாத ஒன்று. படம் குறித்த அறிவிப்பு வெளியாவது முதலே சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுவது, வெறுப்புப் பிரசாரம் செய்வது என தெறிக்கவிடுவார்கள்.
படம் வெளியாகும்போது திரையரங்குகளிலும் சம்பவம் செய்வார்கள். கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, கேக் வெட்டுவது, அடிதடி போன்றவை இந்த கொண்டாட்டங்களில் கட்டாயம் இருக்கும். படத்தின் வசூலை வைத்தும், எந்த நடிகர் பெரியவர்? என்று அடித்துக் கொள்வார்கள். ரசிகர்களின் இந்த போக்கை சம்மந்தப்பட்ட நடிகர்களும் விரும்புவதில்லை. திரைப்படங்களுக்காக, நடிகர்களுக்காக ரசிகர்கள் அடித்துக் கொள்வதை தற்போது திரையுலகினரும் விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தமிழ் சினிமா ரசிகர்களின் போக்கு குறித்து கவலை தெரிவித்திருந்தார். ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள "ரன் பேபி ரன்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, இளைஞர்கள் சினிமாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்திருந்தார். அவர் பேசும்போது, "இப்போது, படத்தின் வசூல் பற்றி இளைஞர்கள் அதிகமாகக் கவலைப்படுகிறார்கள். அமெரிக்காவில் எவ்வளவு வசூல், ஐரோப்பாவில் இவ்வளவு வசூல் என்று பேசி அவர்களின் நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்குகிறார்கள்.
கோடிகளை செலவழித்து படம் தயாரிப்பவர்கள் இதுபற்றி கவலைப்பட்டுக் கொள்வார்கள். இதற்கு இளைஞர்கள் கவலைப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தற்போது பல நாடுகளில் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில் இளைஞர்களின் ஆற்றல் முக்கியம். அந்தச் சக்தியை, திரைப்படங்களின் வசூல் உள்ளிட்டவற்றுக்காக இழக்க வேண்டாம்" என்று கூறினார்.