சென்னை: இந்திய சினிமாவின் ஸ்டைல் ஐகான் என அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். 40 ஆண்டுகளுக்கு மேலாக தனது எவர்கிரீன் ஸ்டைலால் எல்லோரையும் கட்டிப் போட்டு உள்ள காந்த சக்தி ரஜினிகாந்த் என கூறலாம். ரஜினி படம் வெளியாகிறது என்றாலே அந்த நாள் ஊரேங்கும் தீபாவளி போல் களைகட்டும். ஆனால் இவரது சமீபத்திய படங்கள் சுமாரான வெற்றியைப் பெற்றது. இதனால் இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இனி ரஜினிகாந்த் அவ்வளவு தான் என பல பேச்சுகள் அடிபட்டது.
இந்த நிலையில் தான் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் சமீபத்தில் வெளியானது. படம் வெளியாகி ரஜினிகாந்த் யார் என்பதை இப்போதுள்ள இளைஞர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது. படம் வெளியாகி உலகம் முழுவதும் மிகப் பெரிய வரவேற்பு மற்றும் வசூலை பெற்று வருகிறது. நெல்சன் கடைசியாக இயக்கிய பீஸ்ட் திரைப்படம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.
இதனால் நெல்சன் மீதும் எதிர்வினைகள் ஏற்பட்டது. இதனால் ரஜினி படத்தின் இயக்குநரை மாற்றும் முடிவில் இருந்தது. ஆனால் ரஜினி நெல்சனே எனது அடுத்த படத்தை இயக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். இத்தனை தடைகளை தாண்டி இன்று வெற்றி படத்தை நெல்சன் கொடுத்துள்ளார்.
ஜெயிலர் படம் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவருக்குமே மிகப் பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. இதனால் ரஜினிகாந்த் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். படம் வெளியீட்டுக்கு முன்பே இமயமலை சென்றுவிட்டார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை சென்றுள்ளார். அங்கு கோயில்கள் ஆசிரமம் என சென்று தியானம், யோகா என நிம்மதியாக உள்ளார்.