சென்னை:இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர், ரஜினிகாந்த். இவர் நேற்று (ஜூன் 7) சென்னையில் உள்ள ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை நேரில் வந்து பார்வையிட்டுள்ளார். அப்போது ரஜினிகாந்த் உடன் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மற்றும் எம்எஸ் குகன் ஆகியோரும் மியூசியத்தை பார்வையிட்டு ரசித்தனர்.
அதேநேரம், இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனமும் ஒன்று. இந்த நிலையில், ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
இவ்வாறு திறக்கப்பட்ட இந்த மியூசியம், ஆடியோ மற்றும் வீடியோ உபகரணங்களாலும், முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, சம்சாரம் அது மின்சாரம் மற்றும் எஜமான் உள்ளிட்ட பல பெருமை வாய்ந்த படங்களின் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள், மோட்டார் பைக்குகள் மற்றும் கார்கள் ஆகியவற்றையும் தன்னிடத்தில் கொண்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், கடந்த 1983ஆம் ஆண்டில் தமிழில் வெளியான பாயும் புலி என்ற படத்தில் ரஜினிகாந்த் ஓட்டிய சுசுகி ஆர்வி 90 (RV 90), சிவப்பு நிற பழமை வாய்ந்த எம்ஜி டிபி (MG TB) கார் மற்றும் 2007இல் வெளியான ‘சிவாஜி’ படத்தில் இடம் பெற்றிருந்த ரஜினியின் சிலை என பல பொக்கிஷப் பொருட்கள், இந்த மியூசியத்தில் உள்ள கவனம் ஈர்க்கும் விஷயங்கள் ஆகும்.
மேலும், சிவாஜி படத்தின் ஒரு பாடலில் நடிகை ஸ்ரேயா அமர்ந்து வந்த பல்லக்கு, எஜமான் படத்தின் ஒரு பாடலில் மீனா அமர்ந்து வந்த பல்லக்கு, ஏவிஎம் சரவணன் பயன்படுத்திய விதவிதமான கார்கள் ஆகியவையும் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும், அன்றைய காலத்தில் எடிட்டிங் செய்ய பயன்படுத்தப்பட்ட கருவிகள், கேமரா லென்ஸ் மற்றும் படப்பிடிப்பு கருவிகள் உள்ளிட்டவையும் இதில் இடம் பெற்றுள்ளன.
இந்த அருங்காட்சியகம் வாரத்தின் 6 நாட்கள் திறந்திருக்கும். ஒவ்வொரு செவ்வாய்கிழமை அன்றும் மற்றும் இதர பொது விடுமுறைகள் அன்றும் மூடப்பட்டிருக்கும். அதேபோல், அருங்காட்சியகம் திறந்திருக்கும் நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக அருங்காட்சியகம் இயங்கும். இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட பெரியவர்களுக்கு 200 ரூபாயும், சிறியவர்களுக்கு 150 ரூபாயும் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மேலும், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் கதாநாயகனாக ரஜினிகாந்த் நடித்து வந்த நிலையில், சமீபத்தில் அப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து உள்ளதாக படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல், ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லால் சலாம்’ என்ற படத்தில் காமியோ கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பெரிய ஹீரோக்களுக்கான ஃபார்முலாவில் என்னால் கதை பண்ண முடியாது: பிரபல இயக்குநர்!