சென்னை: சென்னை மியூசிக் அகாடமியில் தனியார் மருத்துவமனையின் 25 வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் நடிகர் ரஜினிகாந்த், பத்திரிகையாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த், முன்னள் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு உரையாற்றினார்கள். இதில் சிறுநீரக பாதிப்பு காரணமாகவே தான் அரசியலுக்கு வரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஏன் அரசியலில் வரவில்லை என்பது குறித்து முதல் முறையாக ரஜினிகாந்த் மனம் திறந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இல்லை. ஆனால் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற முயற்சி பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருந்தது. "நான் எப்படி வருவேன், எப்போது வருவேனு யாருக்கும் தெரியாது. ஆனால் வர வேண்டிய நேரத்திற்கு கண்டிப்பாக வருவேன்" என தனது திரைப்படங்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களிடம் கடந்த 25 ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் கூறி வருகிறார்.
கர்நாடகாவில் பேருந்தின் நடத்துனராக இருந்த ரஜினிகாந்த், 1980களில் தமிழ்நாட்டில் திரைப்பட நடிகர்களில் தவிர்க்க முடியாத நடிகராக விளங்கினார். தமிழக மக்களால் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று நடிகர் ரஜினிகாந்த் அழைக்கப்படுகிறார். 1990 கால கட்டங்களில் ரஜினிக்கு அரசியல் ஆசை வருகிறது.
அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த ஜி.கே.மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். ரஜினியின் அரசியல் ஆசையை கணித்த ஜி.கே.மூப்பனார், தனது கட்சியில் சேர்த்து விட வேண்டும் என்று முயற்சி செய்தார். ஆனால் திரைப்பட உலகில் உச்சக்கட்டத்தில் இருந்ததால் ரஜினி மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.
1991ஆம் ஆண்டு அதிமுக-காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெற்று முதல் முறையாக ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார். அந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சியின் மீதும், ஜெயலலிதாவின் தனிபட்ட செயல்பாடுகள் மீதும் மக்களுக்கு அதிருப்தி இருந்தது. தமிழ்நாடு திறமையற்ற நிர்வாகத்தால் சீரழிந்து கொண்டிருக்கிறது என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார்.
1996ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் அங்கம் வகித்த ஜி.கே.மூப்பனார், ரஜினிகாந்த்தை ஒரு முகமாகவோ, குரலாகவோ பயன்படுத்துகிறார் எனக் கூறப்பட்டது. அதே காலகட்டத்தில் அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து இருந்தார். அண்ணாமலை திரைப்படத்தில் நடிகர் ரஜினி ஓட்டிய சைக்கிள் கதாபாத்திரம் பிரபலமாக பேசப்பட்டது.
இதனால் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த தாமக, சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டது. 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆளுங்கட்சி மீதான அதிருப்தி, திமுக-தமாக கூட்டணி பலம் மற்றும் ரஜினியின் குரல் ஆகியவை பயன்படுத்தி திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பின்னர் 5 ஆண்டுகள் திமுக ஆட்சி நடைபெற்று மீண்டும் 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைத்தது.
அப்பொழுது முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள் கூறி தனது நிலைப்பாட்டை ரஜினிகாந்த் மாற்றிக் கொண்டார். அப்போது இருந்து ஜெயலலிதாவும், கருணாநிதியும் தீவிர அரசியலில் இருக்கும் வரை வெளிப்படையாக ரஜினிகாந்த் அரசியல் பேச முடியவில்லை.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி, "2021ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் போருக்கு தயாராகுங்கள்" என தனது ரசிகர் மன்ற தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு உறுதி அளித்தார்.