சென்னை: இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா, சங்கீதா, லைலா ஆகியோரின் நடிப்பில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிதாமகன். ஜெயகாந்தனின் நந்தவனத்தில் ஓர் ஆண்டி சிறுகதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
இதில் விக்ரம் மற்றும் சூர்யா இருவரது நடிப்பும் பெரிதாக பேசப்பட்டது. விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இப்படத்தை வி.ஏ.துரை தயாரித்திருந்தார். இவர், பிதாமகன் மட்டுமின்றி எவர்கிரீன் மூவீஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, என்னம்மா கண்ணு, லூட்டி, பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த பாபா படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் இருந்தார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் வி.ஏ.துரை, நீரிழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் உடல் மெலிந்து மிகவும் மோசமாக நிலையில் காணப்பட்டார். கடந்த சில வருடங்களாக நீரிழிவு நோயால் தான் அவதிப்பட்டு வருவதாகவும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற கூட பணம் இல்லாமல் சிரமப்படுவதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.
நீரிழிவு நோயால் கால்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனது மருத்துவ செலவுக்கு திரைத்துரையினர் உதவி செய்ய வேண்டும் என்றும் கோரினார். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்திடம் உதவி கேட்டார். அதேபோல் இயக்குனர் பாலா தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தர வேண்டும் என்றும் கோரினார்.
இந்த வீடியோ வெளியானதையடுத்து, தயாரிப்பாளர் துரையின் மருத்துவ செலவுக்காக நடிகர் சூர்யா 2 லட்சம் ரூபாய் கொடுத்து உதவியுள்ளார். நடிகர் கருணாஸ் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திரைத்துரையினர் சிலர் பண உதவி செய்து வருகின்றனர். ஆனால், தயாரிப்பாளர் துரை நடிகர் ரஜினிகாந்திடம் உதவி கேட்டும், இதுவரை அவர் எதுவும் பேசவில்லை என கூறப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் துரையை போனில் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். மேலும், 'மருத்துவ செலவு பற்றி கவலைப்படாதீர்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்' என்றும் ஆறுதல் கூறியுள்ளார் ரஜினிகாந்த். ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாகவும், படப்பிடிப்பு முடிந்தவுடன் நேரில் வந்து பார்ப்பதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
பிதாமகன் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தை தனக்கு இயக்கித் தரும்படி தயாரிப்பாளர் வி.ஏ. துரை, இயக்குனர் பாலாவிடம் கேட்டதாகவும், அதற்காக 25 லட்சம் ரூபாயை முன்பணமாக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு பின் இருவரும் இணைந்து படம் எடுக்கவில்லை. துரை பணத்தை திருப்பி கேட்டும் இயக்குனர் பாலா தரவில்லை என தெரிகிறது. கடந்த ஆண்டு தயாரிப்பாளர் துரை மீண்டும் இயக்குனர் பாலாவிடம் பணத்தை திருப்பித் தரும்படி கேட்டார். பாலாவின் அலுவலகத்தில் போராட்டமும் நடத்தினார். அப்போதும் இயக்குனர் பாலா எதுவும் பதிலளிக்கவில்லை என தெரிகிறது.
இதையும் படிங்க: திரையுலகிற்கு முக்கியமான இயக்குனர் வெற்றிமாறன் - விடுதலை இசை வெளியீட்டு விழாவில் இளைஞராஜா புகழாரம்!