சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து வெளியாகி உள்ள திரைப்படம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படம் கடந்த நவம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் வெளியாகி, தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 2014ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்றது. தேசிய விருதுகள் உட்பட பல விருதுகள் இப்படத்திற்கு கிடைத்தது. இந்நிலையில், 8 வருடத்திற்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்.
முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் கார்த்திக் சுப்புராஜின் திறமையான இயக்கத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும், ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் நடிப்பும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு மிகவும் பக்க பலமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். இது குறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு. வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள். லாரன்ஸால் இப்படியும் நடிக்க முடியுமா என்ற பிரமிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரையுலக நடிகவேள்.