சென்னை:69 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (ஆக.24) அறிவிக்கப்பட்டது. தமிழில் கடைசி விவசாயி திரைப்படம் சிறந்த பிராந்திய மொழி பிரிவில் விருது பெற்றது. அதேபோல் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் ‘மாயவா தூயவா’ பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பின்னணி பாடகி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் வெளியிட்டுள்ள ஆடியோவில், “நிலவில் சந்திரயான் இறங்கும்பொழுது இஸ்ரோவில் உள்ள விஞ்ஞானிகள் மட்டுமல்ல அந்த கட்டடத்தில் பணிபுரியும் அனைவருமே பெருமைப்பட்டு இருப்பார்கள், மகிழ்ந்திருப்பார்கள்.
அப்படி பெருமைக்குரிய தேசிய விருது இரவின் நிழல் படத்தில் ஸ்ரேயா கோஷல் ‘மாயவா தூயவா’ என்ற பாடலுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்ட பொழுது முழு முதல் காரணமான விஞ்ஞானியான ஏ.ஆர். ரகுமானுக்கு எனது மனப்பூர்வமான நன்றி. இஸ்ரோவில் பணிபுரிந்த நிறைய ஊழியர்களில் ஒருவன் போல அந்த படத்திற்காக உழைத்த ஊழியர்களில் ஒருவனாக நானும் மகிழ்கிறேன் பெருமைப்படுகிறேன்.