அரியலூர்அருகேசெந்துறையைச் சேர்ந்தவர், ஆசைத்தம்பி. இவர் நடிகர் பாக்யராஜின் தீவிர ரசிகர். பாக்யராஜ் நடித்த அத்தனை படங்களையும் முதல் நாளில் சென்று பார்க்கும் பழக்கம் உள்ளவர். அதேபோல பாக்யராஜின் கதை, திரைக்கதை, வசனம் போன்றவற்றை பாராட்டி அடிக்கடி கடிதம் எழுதும் தீவிர ரசிகர் ஆவார். பாக்யராஜின் தொடர்பு எல்லையிலேயே இருந்து வந்த ஆசைத்தம்பி, தனது இல்லத்தில் நடந்த அனைத்து சுப நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் அவ்வப்போது பாக்யராஜுக்கு தகவல் தெரிவித்து வந்தார்.
தனது மகன் பிறந்தது வரை அனைத்து தகவல்களையும் நடிகர் பாக்யராஜுக்கு அவர் தெரிவித்துக் கொண்டே இருந்தார். இவ்வாறு நடிகர் பாக்யராஜ் உடன் கூடிய ஆசைத்தம்பியின் நட்பு வட்டம் தொடர்ச்சியாக இருந்து வந்தது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நடிகர் பாக்யராஜ் அரியலூர் வந்தார்.
அப்போது, யாருமே எதிர்பார்க்காத வகையில் செந்துறையில் உள்ள ஆசைத்தம்பி வீட்டிற்கு திடீரென்று பாக்யராஜ் சென்றார். வீட்டிற்குச் சென்ற பாக்யராஜ், ஆசைத்தம்பி குடும்பத்தினரை மகிழ்ச்சியுடன் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்னர், ஆசைத்தம்பி மகனுக்கு பாக்யராஜ் வாழ்த்து தெரிவித்தார்.