சென்னை: விக்னேஷ் ஷா இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ’சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இவ்விழாவில் அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா, பாடகர் மனோ, தயாரிப்பாளர் பிரபு திலக், இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் பேசுகையில், ”மிர்ச்சி சிவா இந்த படத்தில் பாடவில்லை ஒருவேளை ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் பாட வாய்ப்புள்ளது என்று கலாய்த்தார். முதல் படத்திலேயே நிறைய நடிகர்களை வைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் ஷா இயக்கியுள்ளார்” என்றார்.
பாடகர் மனோ பேசுகையில், ”சிங்காரவேலன் படத்திற்குப் பிறகு இளையராஜா என்னை அழைத்து நடிக்கப் போனால் உனக்காகப் பாடல் காத்திருக்காது என கூறினார். அதனால் அதற்குப் பிறகு நான் நடிக்கச் செல்லவில்லை. தற்போது மீண்டும் இந்த படத்தில் நடித்துள்ளேன் அனைவருக்கும் நன்றி. மிர்ச்சி சிவாவின் ரசிகன் நான். எனது பாடல்களுக்கு மிர்ச்சி சிவா ரசிகர். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சிவாவுக்கு நன்றி” என்று கூறினார்.
பின்னர் பேசிய மிர்ச்சி சிவா, "கரோனா ஊரடங்கு முடிந்த பிறகு முதலில் தொடங்கிய படம் இது. இக்கதையை இயக்குனர் போனில் என்னிடம் சொன்னார். கதை மிகவும் நன்றாக இருந்தது. எனக்கு கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடிப்பதாக சொன்னார்கள். ஆனால் படப்பிடிப்பு சமயத்தில் ஒரு செல்போனை கையில் கொடுத்து இதுதான் மேகா ஆகாஷ் என்றனர். கடைசி வரை மேகா ஆகாஷை கண்ணில் காட்டவில்லை. இசை வெளியீட்டுக்கு வருவார் என்று பார்த்தால் இங்கேயும் இல்லை.