சென்னை: இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 56. இன்று காலை எதிர்நீச்சல் தொடருக்காக டப்பிங் பணிகளில் இருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடன் பணியாற்றியவர்கள் அவரை உடனே மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மாரிமுத்து ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மாரிமுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாரிமுத்து தேனி மாவட்டம் பசுமலை கிராமத்தில் பிறந்தவர். இவருக்கு பாக்யலட்சுமி என்ற மனைவியும், அகிலன் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். கவிஞர் வைரமுத்துவின் உதவியாளராக இருந்த பின்னர் ராஜ் கிரண் இயக்கிய அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசா தான் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அதன் பின் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களான மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலரது படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.
குஷி, மன்மதன் ஆகிய படங்கள் இவர் பணியாற்றிய குறிப்பிடத்தக்க படங்களாகும். கடந்த 2008இல் வெளியான கண்ணும் கண்ணும் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் பிரசன்னா கதாநாயகனாக நடித்தார். மாரிமுத்துவை வெள்ளித்திரையில் இயக்குநர் மிஷ்கின் யுத்தம் செய் படம் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். இதன் பிறகு நிமிர்ந்து நில், கொம்பன், முதல் விக்ரம் வரை பல படங்களில் குணச்சித்திர நடிகராக கலக்கியிருப்பார். இவர் கடைசியாக நடித்து வெளியான படம் ஜெயிலர்.