சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மன்சூர் அலிகான், சமீபத்திய படங்களில் காமெடி கலந்த வில்லனாக நடித்து வருகிறார். மன்சூர் அலிகான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான லியோ படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். மிகச் சிறிய வேடம் தான் என்றாலும் அதிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் மன்சூர் அலிகான் தற்போது சரக்கு என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படம் சென்சாருக்கு சென்ற போது அதிகமான காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்குமாறு சென்சார் போர்டு தெரிவித்துள்ளதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருந்தார். அம்பானி, அதானி போன்ற வசனங்கள் எல்லாம் வைக்கக் கூடாது என்று கூறியதாகவும் அவர் பேசியிருந்தார்.
திருநங்கைகளை மேம்படுத்துவதற்கு வைத்திருந்த ஒரு பாடலை, கவர்ச்சியாக உள்ளது என்று சொல்லி அதை எடுக்க வேண்டும் என கூறினர். மேலும் கூடங்குளம் மற்றும் இலங்கைத் தமிழர் படுகொலை தொடர்பாக இருந்த பாடல் வரிகளை அகற்ற வேண்டும் என கூறினர். இந்த சம்பவங்கள் தொடர்பாக வேறு யார் தான் கேள்வி எழுப்புவார்கள்? என்று பேசியிருந்தார்.