சென்னை: மன்சூர் அலிகான் தயாரிப்பில் உருவாகியுள்ள சரக்கு திரைப்படத்தின் சென்சார் தொடர்பாக, மன்சூர் அலிகான் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (அக்.21) செய்தியாளர்களைச் சந்தித்தார். இது தொடர்பாக அவர் பேசியபோது, “இந்த சரக்கு படத்திற்காக எனது சொத்தை விற்று படத்தை எடுத்துள்ளோம்.
சென்சார் குழுவினர் படத்தைப் பார்த்தார்கள். பின்பு நீண்ட லிஸ்ட் அளித்து, அதில் இருக்கும் காட்சிகளை அகற்ற வேண்டும் என்றும், முக்கியமாக அதானி என்று பெயர் இருக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என கூறினார்கள். ஆனால், நான் அதற்கு மறுத்து விட்டேன். மேலும், வெற்றிமாறன் எடுத்த விடுதலை படத்தில் கற்பனை கதை என போட்டது போல், இந்த திரைப்படத்திலும் வைக்கின்றோம் என கூறியதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர்.
திருநங்கைகளை மேம்படுத்துவதற்கு வைத்திருந்த ஒரு பாடலை, கவர்ச்சியாக உள்ளது என்று சொல்லி அதை எடுக்க வேண்டும் என கூறினர். கூடங்குளம் மற்றும் இலங்கைத் தமிழர் படுகொலை தொடர்பாக இருந்த பாடல் வரிகளை அகற்ற வேண்டும் என கூறினர். இந்த சம்பவங்கள் தொடர்பாக வேறு யார்தான் கேள்வி எழுப்புவார்கள்?
மாநில அரசில் இருக்கும் மது பழக்கத்திலிருந்து மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும்படி படம் எடுத்துள்ளோம். படத்தில் இருக்கும் ஒரு கதாபாத்திரம் ரம்மி விளையாடக் கூடாது எனக் கூறி இருப்பதை அகற்ற கூறுகின்றனர். மக்களின் ரத்தத்தை குடித்து ரம்மி, பணம் பிடுங்குகிறது. தமிழ்நாடு அரசு, அதானி, அம்பானி, டாஸ்மாக் பற்றி பேசக் கூடாது என கூறுகின்றனர்.