விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவனின் 60ஆவது பிறந்த நாள் விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, 'கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாளத் தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்த அடையாளங்களைப் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்' என்று பேசினார்.
இந்த கருத்துக்கு பலதரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் நடிகர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வெற்றிமாறனின் இந்தக் கருத்து மிக உண்மையானது. சரியானது! இராசராச சோழனை இந்து மன்னர் என்று கூறுவது தமிழர் அறத்திற்கே எதிரானது. இராசராச சோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கப்பட்டதுதான். இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள்.
ஆகவே, இந்தியா என்பது ஒரு தேசமில்லை. அது பல தேசங்களின் ஒன்றியம். இதை இந்திய அரசியலமைப்புச் சட்டமே சொல்கிறது. பல்வேறு தேசிய இனங்கள் இணைந்து வாழும் இந்திய ஒன்றியத்தில் பல்வேறு மதங்கள் இருப்பது இயல்பானது. அதுதான் வேற்றுமையில் ஒற்றுமை. அதில் ஒற்றை மதம் மட்டும் தலைதூக்கி எல்லாவற்றையும் விழுங்க நினைக்கும் போதுதான் சிக்கல் இங்கே உருவாகிறது.
அந்தக் காலத்தில் இந்துமதமே கிடையாது. சைவம், வைணவம், ஆசிவகம் என பல மதங்கள். ராசராசன் சிவனை வழிபட்ட சைவர் என்பதே வரலாறு. ஆனால், ராசராசசோழனை, ராஜேந்திர சோழனை இந்து மத மன்னர்கள் என்று சொல்வது அல்லது மாற்ற நினைப்பது வேடிக்கையானது.
காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தமது தெய்வக்குரல் நூலில்.. “நாம் சைவராகவும், வைணவராகவும், இன்னும் பல்வேறு மதத்தினராகவும் இருந்த நம்மை இந்து என்று ஆங்கிலேயர்கள் ஒன்றாக இணைத்ததால் பிழைத்துக்கொண்டோம் என்றார்” அந்தப் ”பிழைத்துக் கொண்டோம்” என்ற வார்த்தையிலிருந்துதான் இன்று அனைத்தையும் தனதாக்கி பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள் ஆரிய பிராமணர்கள்.