தனியார் கல்லூரியில் நடிகர் ஆதியின் 'பிடி சார்' படத்தின் போஸ்டர் வெளியீடு சென்னை:பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் கல்லூரியில் பாரம்பரிய உடை அணிந்து மாணவ மாணவிகள், பேராசிரியர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். கிராமத்தின் பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் உறியடி, மாட்டு வண்டி, ராட்டினம், தின்பண்டங்கள் ஆகியவை வைக்கப்பட்டன.
இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஹிப்ஹாப் ஆதி, நடிகை காஷ்மீரா பர்தேசி, இயக்குநர் மற்றும் நடிகர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு, பொங்கல் வைத்து கொண்டாடினர். முன்னதாக ஹிப்ஹாப் ஆதி மற்றும் காஷ்மீரா பர்தேசி இணைந்து நடித்த 'பி.டி.சார்' படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது.
மேலும் மாணவர்களுடன் தன்னுடைய பாடல்களைப் பாடி, நடனமாடி உற்சாகமாக கொண்டாடியதுடன் செல்ஃபி புகைப்படமும் எடுத்துக்கொண்டார், ஹிப்ஹாப் தமிழா ஆதி.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹிப்ஹாப் ஆதியிடம், ஆளுநர் தமிழகம் என்று கூறியது பற்றி கருத்து கேட்டபோது, 'கல்லூரி நிகழ்ச்சியில் அரசியல் குறித்து பேசவேண்டாம். வேறொரு மேடை நிகழ்ச்சியில் பேசலாம். பி.டி டீச்சர் படம் கல்லூரி மற்றும் பள்ளி சம்பந்தப்பட்டது. இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்களில் முழுவதுமாக படம் முடிந்து வெளிவர உள்ளது. தவறான பாதைக்குச் செல்லும் மாணவர்கள் திருந்தி நல்ல பாதைக்கு வர வேண்டும்' என்று நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி கூறியுள்ளார்.
இதையும் படிங்க:வாரிசு பட கொண்டாட்டத்தில் பலூன் வெடித்து தீ விபத்து!