சென்னை:தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாகப் பொன்னியின் செல்வன் நாவல் படமாக எடுக்கப்பட்டு இரண்டு பாகங்களாக வெளியானது. அப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் 234வது படத்தை மணிரத்னம் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
பின்னர் கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் படத்தின் தலைப்பு Thug Life என அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயன்ட் மூவீஸ், மகேந்திரன், சிவா ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு பணியை மேற்கொள்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும், அன்பறிவ் சண்டைக் காட்சிகளையும் கையாள்கின்றனர். கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணி, நாயகன் படத்திற்குப் பிறகு 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தில் இணைகின்றனர். இந்த கூட்டணியுடன் தற்போது பல நட்சத்திர நடிகர்களுடன் இணைவதால் ரசிகர்களிடையே படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படம் கேங்ஸ்டர் சம்பந்தப்பட்ட கதை எனவும் கூறப்படுகிறது. தக் லைஃப் படத்தின் அறிவிப்பு வீடியோவில் கமலின் தோற்றம் ரசிகர்களைப் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தது. தற்போது இந்த படத்திற்கான ஃப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கௌதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிகராக அறிமுகமானார். தற்போது மீண்டும் அவரது படத்தில் அதுவும் கமலுடன் நடிக்க உள்ளார் என்கின்றனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசன் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து அவரது 233வது படத்தில் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிக்கும் 2898AD படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"எனக்கு உதவி தேவை" மழைநீர் சூழ்ந்த வீட்டின் முன்பு இருந்து செல்பி போட்ட நடிகர் விஷ்ணு விஷால்!