முதல் படத்தில் ஹீரோவுக்காக வகுக்கப்பட்ட எந்த ஒரு தகுதியும் இல்லை என சினிமா விமர்சகர்களால் ஒதுக்கப்பட்டார். சில வருடங்களுக்குப் பிறகு, கேரளா கஃபே என்ற அந்தாலஜியில் மிருத்துன்ஜெயம் என்ற குறும்படத்தில் மலையாள சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு அன்னாயும் ரசூலும், நார்த் 24 கதம், மகேஷிண்டே பிரதிகாரம், என தொடங்கி மாலிக், மலையான்குஞ்சு, தமிழ் சினிமாவில் விக்ரம் வரை பல படங்களில் நடித்து இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருகிறார், ஃபகத் ஃபாசில்.
ஃபகத் ஃபாசில் என்னதான் ஹீரோவாக நடித்து பெயர் பெற்றாலும் அவரின் நெகட்டிவ் கதாபாத்திரங்களுக்கு ரசிகர்கள் அதிகம். ஃபகத் ஃபாசில் தனது சினிமா வாழ்க்கையில் ஆரம்ப காலகட்டத்திலேயே ’சப்பா குரிஷு’ (chappa kurishu) என்ற படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றார். மேலும் இந்தப் படத்திற்காக சிறந்த நடிகருக்கான கேரள அரசின் மாநில விருதைப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து ’22 female kottayam' என்ற படத்தில் வில்லனாக நடித்தார். இந்தப் படம் கேரள பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படம் தமிழில் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ என்ற பெயரில் ரீமேக்கானது. இந்த படத்திற்குப் பிறகு, ஃபகத் ஃபாசில் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தார். பெங்களூரு டேஸ், ட்ரான்ஸ், கும்பளாங்கி நைட்ஸ் என சில படங்களில் இந்திய சினிமாவையே, தனது தனித்துவமான நடிப்பு மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
குறிப்பாக, தொண்டிமுதலும் த்ரிசாக்ஷியும் (thondimuthalum drikshasiyum) ஃபகத்துக்கு முக்கிய படமாக அமைந்தது. இந்தப் படத்தில் நகை திருடி மாட்டிக் கொண்ட பின், அந்த நகையின் உரிமையாளரிடம் சமரசம் பேசும் காட்சி தொடங்கி, போலீசையே குழப்பும் காட்சி வரை தனது வில்லத்தனம் கொண்ட நடிப்பால் ஆடியன்ஸை ஈர்த்திருப்பார். இந்தப் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.
மலையாள சினிமாவில் அவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழில் ’வேலைக்காரன்’, ’சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். குறிப்பாக, ‘கும்பளாங்கி நைட்ஸ்’ (kumbalangi nights) படத்தில் பகத் பாசில் ஷமி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் பார்ப்போரை நடுங்கும் அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.